வெளிநாட்டில் மருத்துவக் கல்வி - உஷார்

நம் நாட்டில் ஆங்கில மருத்துவத்தில் பொது மருத்துவம், பல்மருத்துவம் படிக்க வேண்டுமானால் மாணவர்கள் சம்பந்தப்பட்ட பிளஸ் 2 பாடத்தில் 200- க்கு 200 மதிப்பெண் வரை பெற்றவர்களுக்குத்தான் இந்திய மருத்துவக் கல்லூரிகளில் இலவச இடங்களில் சேர வாய்ப்பு கிடைக்கும்.

நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களாய் இருந்தாலும் வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குக் எட்டாக்கனிதான். இந்த நிலையில் வெளிநாட்டு வாய்ப்புகளை நோக்கி செல்கின்றனர்.

“பொதுவாக வெளிநாட்டில் படிப்பதில் பல நன்மைகள் உண்டுதான். ஆனால் என்ன படிக்கிறோம், எங்கே படிக்கிறோம், எப்படிப் படிக்கிறோம் என்பதைப் பொறுத்தே எதிர்காலம் அமையும்...” என்கின்றனர் கல்வியாளர்கள்.

‘50% மதிப்பெண் போதும். உலக ரேங்கிங் கல்லூரியில் குறைந்த செலவில், பகுதிநேர வேலை, இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளோடு படிக்கலாம், படுப்பு முடிந்ததும் இலட்ச இலட்சமாக சம்பளம்தான் என்று இங்குள்ள ஏஜண்டுகள் ப்ரைன்வாஷ் செய்து மாணவர்களை உக்ரைனுக்கும் ருஷியவிற்கும் அனுப்புகின்றனர். ஆனால் அங்குசென்று படிப்பு முடித்து திரும்பிய பல மாணவர்களின் எதிர்காலம் இன்று கேள்விக்குறியாக உள்ளது. குறிப்பாக MBBS பட்டம் பெற்றவர்கள் நிலைமை படுமோசம்.

வெளிநாடு சென்று படிக்கவேண்டுமென்றால் எந்தவகையான கல்லூரிகளில் சேரலாம் என்று இங்கு காண்போம்.   

வெளிநாடு சென்று படிக்க விரும்பும் நடுத்தர மற்றும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள், கல்வித் தகுதியைப் பொறுத்து, (Scholastic Aptitude Test ) SAT - 1 மற்றும் SAT - 2  நுழைவுத் தேர்வுகளை எழுதலாம்.

இந்த இரண்டு தகுதி தேர்விலும் தேர்வாகும் மாணவர்கள்தான் வெளிநாட்டுக்கு சென்று படிக்க முடியும்.

SAT  தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு, அவர்களின் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப் பட்டு,  வெளிநாட்டு பல்கலைகழகங்களுக்கு இடம் கிடைக்கும். நல்ல மெரிட் இருந்தால் முன்னணி பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்கும்; அவர்கள் பணம் செலுத்த வேண்டியதில்லை. மதிப்பெண்கள் குறைவாக இருந்தால், ஸ்காலர்ஷிப் கிடைக்காது. மேலும் அடுத்தடுத்த கல்லூரிகளில் இடம் கிடைக்கும். தரமான பல்கலைகழகத்தில் இடம் கிடைக்கவில்லையென்றால் அங்கு சென்று கட்டணம் செலுத்தி படிக்கத் தேவையில்லை.

வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ் படித்தவர்களுக்கு தகுதித் தேர்வு

குறிப்பிட்ட நாடுகளைத் தவிர வெளிநாடுகளில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படித்துவிட்டு வந்தாலும், இந்தியாவில் திறன்தணிக்கைத் தேர்வில் FMGE (Foreign Medical Graduates Examination)  தேர்ச்சி பெற்றவர்களுகுகு மட்டுமே, மருத்துவத் தொழில் புரியவும் அனுமதி வழங்கபடுகிறது.

FMGE தேர்ச்சிக்குப் பின்னரே பயிற்சி மருத்துவராக இந்திய மருத்துவ கவுன்சிலில் (MCI) பெயரைப் பதிவு செய்து, இங்கே டாக்டராகப் பணிபுரிய முடியும். தேர்வில் தேர்ச்சி பெறாமல் சிகிச்சையளித்த சிலர், போலி மருத்துவர்கள் என்று கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் செலவழித்த பணமும் 6 ஆண்டுகால உழைப்பும் வீணாகிப்போயுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய ஐந்து நாடுகளில் உள்ள அங்கீகாரம் பெற்ற மருத்துவக் கல்லூரிகளில் படிப்பவர்கள் இந்தத் தகுதித் தேர்வை எழுத வேண்டியது இல்லை.

மேலும் விவரங்கள் www.natboard.edu.in/fmge  என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

தரமான பல்கலைகழகத்தில் இடம் கிடைக்கவில்லையென்றால் அங்கு சென்று கட்டணம் செலுத்தி மருத்துவம் படிப்பதில் பெரிய பயன் ஏதும் இல்லை என்றே கல்வியாளர்கள் கருதுகின்றனர். அங்கு சென்று படிக்கும் மாணவர்களுக்கு பெரும்பாலும் சரியான பயிற்சி வசதி கிடையாது. இதனால் அவ்வாறு பயிற்சியின்றி படித்துவிட்டு திரும்பிய மாணவர்களுக்கு நோயாளிகளைக் கூட  சரியாக கையாளத் தெரிவதில்லை மேலும் தரமற்ற பல்கலைகழகத்தில் படித்து வரும் பெரும்பான்மையான  மாணவர்கள், FMGE தேர்வில் தேர்ச்சி பெறுவது இல்லை என்கின்றனர்.