முதல்வர் ஜெயலலிதா வேட்புமனுத்தாக்கள்.

 சென்னை ஜூன் 6:

காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில்  வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதா  நேற்று தனது இல்லத்தில் இருந்து மதியம் 1.25 மணிக்கு காரில்  புறப்பட்டார்.வழி நெடுகிலும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். புனித ஜார்ஜ் கோட்டையை தாண்டி ரிசர்வ் வங்கி அலுவலகத்தை கடந்ததும், அவரது வாகனத்தில் இருந்த தமிழக அரசு சின்னமும் மறைக்கப்பட்டு தேசியக் கொடி அகற்றப்பட்டது பின்னர் அதிமுக கட்சிக் கொடி பொருத்தப்பட்டது.  பிற்பகல் 2 மணிக்கு  தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி 4வது மண்டல அலுவலகத்திற்கு வந்தடைந்தார், அவர் பிற்பகல் 2.05 - 2.08 மணிக்குள் வேட்புமனுவைத் தாக்கல் செய்து முடித்தார்.  மனுவில் அவருடைய சொத்து மதிப்பாக ரூ.117 கோடி குறிப்பிட்டுள்ளார். 2011ம் ஆண்டு தேர்தலின் போது அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பாக ரூ.51.40 கோடியும் , 2006ம் ஆண்டு தேர்தலில் ரூ.24.7 கோடி எனவும் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், செங்கோட்டையன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.  முதல்வர் ஜெயலலிதாவுடன் தோழி சசிகலாவும் வந்திருந்தார். அங்கு தேர்தல் அலுவலர் கே.சவுரிராஜனிடம் வேட்புமனுவை முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்தார். அவரது பெயரை ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளரும் அதிமுக மருத்துவர் அணி இணை செயலருமான டாக்டர் காளிதாஸ் முன்மொழிந்தார். மாற்று வேட்பாளராக அதிமுக சார்பில் அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் மனுத் தாக்கல் செய்தார்.  வேட்புமனுவைத் தாக்கல் செய்துவிட்டு ஜெயலலிதா பிற்பகல் 2.08 மணிக்கு வெளியே வந்தார். காரில் ஏறி புறப்படும்போது, அங்கு நின்றிருந்த தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூதிடம் நலம் விசாரித்துவிட்டு போயஸ் தோட்டத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.  

முதல்வர் ஜெயலலிதா வருகையையொட்டி தண்டையார்பேட்டையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். முதல்வர் ஜெயலலிதா வருவதையொட்டி  பல  இடங்களில் போக்குவரத்து  நிறுத்தப்பட்டிருந்ததால் இரண்டு சக்கர வாகனங்களில்  செல்பவர்கள் வெயிலில்  நீண்டநேரம் காத்து நின்றதை காணமுடிந்தது.  தலைமை  செயலகம் முன்பு மட்டும் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து  நிறுத்தப்பட்டிருந்தது.