மருத்துவர் ராமதாஸ் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து

TN Images: 

புத்தாண்டையொட்டி மருத்துவர் ராமதாஸ் தமிழக மக்களுக்கு சோதனைகளைக் கடந்து சாதனைகளை படைக்க புத்தாண்டில் உறுதி ஏற்போம்! என வாழ்த்து தெரிவித்துள்ளார்.   இது குறித்து அவர் வெளியிட்டுள் வாழ்த்துச்செய்தியில் .

எதிர்பார்ப்புகளுடன் தொடங்கும் பயணங்கள் சில நேரங்களில் ஏமாற்றத்தில் முடிகின்றன. 2016 ஆம் ஆண்டும் அப்படிப்பட்ட ஆண்டாக அமைந்தது நல்வாய்ப்புக் கேடானது தான். ஆனால், மாற்றம் ஒன்றே மாறாதது என்பது தான் இயற்கையின் நியதி. அந்த வகையில் 2016-ஆம் ஆண்டில் ஏற்பட்ட சோதனைகளை மறந்து சாதனைகளை படைக்கும் ஆண்டாக 2017-ஆம் ஆண்டு அமையும் என்ற நம்பிக்கையுடன் தமிழக மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

2012-ஆம் ஆண்டில் தொடங்கி 2015 ஆம் ஆண்டு வரை எந்த ஆண்டும் உழவர்களை மகிழ்ச்சிப் படுத்தவில்லை. உழவர்களின் சோகங்களும், இழப்புகளும் கடந்த காலமாகி விடும்; 2016ஆம் ஆண்டு உழவர்களுக்கு உயர்வையும், உழைப்பையும் அளிக்கும் என்று தான் அனைவரும் நம்பினோம். ஆனால், நடந்ததோ அதற்கு நேர் எதிராக அமைந்தது. கடந்த ஆண்டுகளில் காவிரியில் தண்ணீர் வராததால் குறுவை சாகுபடி பொய்த்துப் போன நிலையில் சம்பா சாகுபடியாவது ஓரளவு சாதகமாக இருந்தது. ஆனால், 2016 ஆம் ஆண்டிலோ குறுவையுடன் சேர்த்து சம்பா சாகுபடியும் பொய்த்துப் போனது. அதன் விளைவு காவிரி பாசன மாவட்டங்களிலும் பிற மாவட்டங்களிலும் சேர்த்து 52 உழவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட எந்த துறைக்கும் கடந்த ஆண்டு சாதகமாக அமையவில்லை. வளர்ச்சியில் கடைசி இடத்திற்கு தள்ளியது, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியது, அனைத்துத் துறைகளிலும் ஊழல் என 2016&ஆம் ஆண்டில் தமிழக மக்கள் எதிர்கொண்ட ஏமாற்றங்களையும், சந்தித்த துரோகங்களையும் பட்டியலிடத் தொடங்கினால் பக்கங்கள் போதாது. கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சியை சென்னை மாநகரமும், தமிழகமும் சந்தித்தன. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் குடிநீருக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவியது. சென்னையில் பெய்த மழையால் ஓரளவு நிலைமை சீரடைந்தாலும், சென்னை மாநகர ஏரிகளில் மிகக் குறைந்த அளவே தண்ணீர் இருப்பதால், ஏதேனும் அதிசயம் நடந்தாலொழிய இந்த ஆண்டு கோடைக் காலத்தில் தண்ணீர் பஞ்சத்திலிருந்து சென்னை மாநகர மக்கள் தப்பிப்பதற்கு வழியே கிடையாது.

2015 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அனைத்து காயங்களுக்கும் மருந்து தடவும் வகையிலான மாற்றம் நிச்சயமாக 2016 ஆம் ஆண்டில் நிகழும் என்று அனைவரும் நம்பினர். அதற்கான அறிகுறிகளும் பிரகாசமாகத் தெரிந்தன. ஆனால், கடந்த காலங்களில் கொள்ளையடித்து வைக்கப்பட்டிருந்த பணத்தை வாரியிறைத்ததாலும், அதை தடுக்கும் திறனின்றி தேர்தல் ஆணையம் தூங்கியதாலும் மாற்றம் என்ற நம்பிக்கைச் செடி பணநாயகம் என்ற அமிலம் ஊற்றி அழிக்கப்பட்டது; ஏமாற்றமே பரிசாக கிடைத்தது.

ஆயிரம் தடைகள் வந்தாலும் அவற்றைத் தகர்த்து எறிந்து விட்டு முன்னேறுவது தான் மனித இயல்பு. கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்டவை தடைகள் தான். அவை சாதனைப் பயணத்தை ஒரு போதும் நிறுத்தி விட முடியாது. வளர்ச்சிக்கு எதிரானவர்களின் கைகளில் சிக்கியிருக்கும் தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற இலட்சியத்தை அடைவதே நமது சாதனைப் பயணத்தின் நோக்கமாகும். அந்த இலக்கை குறித்த காலத்திற்கு முன்பாகவே எட்டுவதற்கான அறிகுறிகளும், நம்பிக்கையும் மிகவும் பிரகாசமாக தெரிகின்றன. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு மாற்றம், முன்னேற்றத்தை அடைய இப்போதிலிருந்தே உழைக்க இந்த ஆங்கிலப் புத்தாண்டு நாளில் தமிழக மக்கள் அனைவரும் சபதம் ஏற்கும்படி கேட்டுக் கொண்டு மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

என தெரிவித்துள்ளார்.