மத்திய அரசின் ரியல் எஸ்டேட் மசோதா பில்டர்களுக்கு சாதகமானது

புதுடில்லி: ''மத்திய அரசின் ரியல் எஸ்டேட் மசோதா, பில்டர்களுக்கு சாதகமானது; நடுத்தர மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது,'' என, காங்கிரஸ்துணைத் தலைவர் ராகுல் குற்றம்சாட்டி உள்ளார்.

நிலம் கையகப்படுத்துதல் மசோதா மற்றும் விவசாயிகள் பிரச்னையில், மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வரும் ராகுல், தற்போது, ரியல் எஸ்டேட் மசோதாவை கையில் எடுத்துள்ளார்.
 

கேள்விக்குறி:

டில்லி மற்றும் அதை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில், அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்கி உள்ளவர்களை நேற்று சந்தித்த, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் கூறியதாவது: மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தால், விவசாயிகள், பழங்குடியினர் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. பெரிய நிறுவனங்களுக்கு சாதகமாக, பல திட்டங்களை அமல்படுத்தி வரும், பிரதமர் மோடி அரசு, சாதாரண மக்களின் நலனைப் பற்றி சிந்திப்பதில்லை. மத்திய அரசின் புதிய ரியல் எஸ்டேட் மசோதா, நடுத்தர மக்களுக்கு எதிரானது. அதே நேரத்தில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்கும், பில்டர்களுக்கு சாதகமானது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, கொண்டு வரப்பட்ட, 'ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணைய மசோதா'வில், வீடு வாங்குவோருக்கு சாதகமாக இருந்த பல விதிமுறைகள், தற்போதைய மசோதாவில், நீர்த்துப் போகச் செய்யப்பட்டு உள்ளன. இதனால், பில்டர்கள் தான் பலன் அடைவர். அவர்களிடம் வீடு வாங்கும் நடுத்தரக் குடும்பத்தினர் பெரும் சிரமங்களுக்கு ஆளாக நேரிடும். இந்த விஷயத்தில், நடுத்தர வர்க்கத்தினருக்கு ஆதரவாக நான் செயல்படுவேன். புதிய ரியல் எஸ்டேட் மசோதா அமலுக்கு வந்தால், நீங்கள் குறிப்பிட்ட நாளில், அடுக்குமாடி குடியிருப்பை பெறலாம் என, உங்களிடம் சொல்வர். ஆனால், பல ஆண்டுகள் ஆனாலும், அது நடக்காது. ரியல் எஸ்டேட் துறையை முறைப்படுத்த, முந்தைய அரசு கொண்டு வந்த
மசோதாவை அழிக்க, தற்போதைய அரசு முற்பட்டுள்ளது. இவ்வாறு, ராகுல் கூறினார்.
 

118 திருத்தங்கள்:

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறையின் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அஜய் மாக்கேன் கூறியதாவது: முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த, ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணைய மசோதாவில், தற்போதைய மோடி அரசு, 118 திருத்தங்களைச் செய்துள்ளது. மசோதாவானது வீடு வாங்குவோருக்கு சாதகமாக இருக்க வேண்டும். ஆனால், திருத்தங்கள் மூலம், பில்டர்களுக்கு சாதகமாக மாற்றப்பட்டு உள்ளது. இவ்வாறு, அஜய் மாக்கேன் கூறினார்.