மதிமுக பொதுசெயலாளர் வைகோ தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து.

TN Images: 

ஆங்கில புத்தாண்டு பிறந்ததையொட்டி அரசியல் தலைவர்கள் நாட்டுமக்களுக்கு வாழத்துக்கள் தெரிவித்த வருகின்றனர், மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மையமாகக் கொண்டு, அதற்கு முன்பும் பின்பும் என்று பகுக்கப்பட்டு, தற்போது 2016 ஆண்டுகள் கிறிஸ்துவுக்குப் பின் கடந்து, 2017 இல் உலகம் அடியெடுத்து வைக்கிறது. வேகமாக ஊடுருவி வருகின்ற மேல்நாட்டு கலாச்சாரத்தால் தமிழ்ப் பண்பாட்டுத் தளம் சிதைந்து வருகிற அவலம் மிகவும் கவலை தருகிறது.

உலகின் மிகப் பழமையான தமிழர் நாகரிகத்தின் அடிப்படை அறநெறிகளைப் பாதுகாக்க இப்புத்தாண்டு நாளில் உறுதிகொள்ள வேண்டும்.

காவிரி நதிநீர் உரிமை உள்ளிட்ட தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளுக்கு அண்டை மாநிலங்களால் அச்சுறுத்தல் தொடர்ந்து வரும் நிலையில், அவ்வுரிமைகளைக் காக்கவும், தமிழ்நாட்டைப் பாழ்படுத்தி வருகின்ற மதுவின் கொடுமையிலிருந்து மீட்கவும் இப்புத்தாண்டில் உறுதி ஏற்போம்!

தமிழகத்தில் விவசாயிகள் படும் துன்பமும், தமிழக மீனவர்களின் துயரமும் தாங்க இயலாதவை ஆகும்.

இந்நிலை மாறவும், இலங்கைத் தீவில் சிங்களப் பேரினவாத அரசு, இந்தியா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் ஆயுத உதவியோடு நடத்திய தமிழ் இனப்படுகொலைக்குக் காரணமானவர்களை அனைத்துலக நீதிமன்றக் கூண்டில் நிறுத்தவும், சுதந்திரத் தமிழ் ஈழம் எதிர்காலத்தில் மலரவும் 2017 ஆம் ஆண்டு நுழைவாயில் அமைக்கப் பாடுபடுவோம் என்ற நம்பிக்கையுடன் தமிழக மக்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்று தன வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார்.