மஞ்சள் காமாலை நோய் தீர மஞ்சள் கரிசலாங்கண்ணி.

தாவர விளக்கம்

மூலிகையின் பெயர் : 

கரிசலாங்கண்ணி

ஆங்கிலப் பெயர்: 

ECLIPTA PROSTRATA ROXB

வேறுபெயர்கள்: 

கரிசாலை, கையாந்தகரை, கரிகா, கைகேசி, கைவீசி, கரியசாலை, கரிப்பான், கையான், பொற்றலைக்கரிப்பான்,பொற்கொடி(ECLIPTA PROCENA)

தாவரக்குடும்பம்: 

ASTERACEAE.

அடையாளம்: 

கரிசலாங்கண்ணி ஒரு காயகற்ப மூலிகையாகும். தமிழகமெங்கும் காணப்படும் கரிசலாங்கண்ணி கீரை ஈரமான நிலத்தில் வளரும் இயல்புடையது. வயல் வரப்புகளில் அதிகமாக காணப்படும். எதிரடுக்கில் அமைந்த இலைகளியுடயது, மிகக்குறுஞ்செடியினம். தரையோடு படர்ந்தும் வளர்வதுண்டு. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் ஈரமான நிலத்தில் தானே வளரக்கூடியது மஞ்சள் நிறப் பூ பூக்கும் மஞ்சள் கரிசலாங்கண்ணி,  வெள்ளை நிறப் பூ பூக்கும் வெள்ளை கரிசலாங்கண்ணி . என இரண்டு வகைகள் உண்டு. இரண்டுமே மருத்துவ குணங்கள் நிறைந்தது. இது விதை மூலமும், கட்டிங் மூலமும் இனப்பெருக்கம் செய்யப்படும்.

மஞ்சள் கரிசலாங்கண்ணி ருசியாகவும் காரமின்றியும் இருக்கும், இந்த வகையையே அதிகமாக உணவுக்காக பயன்படுத்துகின்றனர். வெள்ளை பூ உள்ள வெள்ளை கரிசலாங்கண்ணியின் இலை சற்று தடிப்பான கரும்பச்சை நிறமுடைய இலையாக காரமாக இருக்கும். இதை சமையலுக்கு பயன்படுத்த கரிசலாங்கண்ணியின் கீரையை நெய் விட்டு வதக்கி விட்டால் காரம் போய்விடும் மணமும் ருசியும் கொடுக்கும்.

வளர்க்கும் முறை: 

இது விதை மூலமும், கட்டிங் மூலமும் இனப்பெருக்கம் செய்யப்படும்.

மருத்துவக் குணங்கள்: 

இது முக்கிய உள்ளுறுப்புகலான கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகத்தை தூய்மை செய்து பலப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது. சுரப்பிகளை செயல்பட தூண்டும். உடலை உறுதிப்படுத்தும். மஞ்சள் கரிசாலையில் கீரையில் தங்கச் சத்து உள்ளதால், இதை பொற்றிலை என்றும் பொற்கொடி என்றும் அழைக்கிறார்கள் வெள்ளை கரிசாலையில் இரும்புச் சத்தும், மணிச்சத்தும்,சுண்ணாம்புச்சத்தும்,வைட்டமின் -A ,வைட்டமின் -C , முதலிய சத்துக்களும்,தாது உப்புக்களும்,மாவுச்சத்தும்,புரதம் போன்றவைகளும் இருக்கின்றன.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். சளி, இருமல், அஜீரணம், வயிற்றுவலி, குடல்புண், ரத்தசோகை, பித்தப்பை கற்கள் போன்றவற்றை போக்கும். உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பை கரைக்கும் சக்தியும் இதற்கு இருக்கிறது.

மஞ்சள் காமாலை நோய்க்கு கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி இலை இரண்டையும் சம அளவு எடுத்து, அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு 50 மி.லி பசும்பாலில் கலந்து ஏழு நாட்கள் குடித்தால் நோய் குணமாகும். ஈரல் வீக்கம் குறையும், பத்தியம் இருக்க வேண்டும். உப்பு, புளி, காரம் மற்றும் எண்ணெய் கலந்த உணவுகளை அறவே சாப்பிடக்கூடாது.  நாள்பட்ட காமாலைக்கு  முதல் நாள்காலை 10 மி.லி. எனத்தொடவ்கி 20, 30, 40, என 10 நாள் கூட்டி அதே விகிதப்படி 100 மி.லி ஆனதும் 90, 80, 70 என 10 நாள் குறைத்து ஆக இருபது நாள் சாப்பிட நாள்பட்ட முற்றிய காமாலையும் தீரும். பத்தியம் இருத்தல் வேண்டும். புளி, காரம், ஆகாது.மோரில் சாப்பிடவும்.

கடுமையான ரத்தசோகைக்கு ஒரு கைப்பிடி அளவு கரிசலாங்கண்ணி கீரையை எடுத்து, ஐந்து மிளகு சேர்த்து அரைத்து, ஒரு நெல்லிக்காய் அளவு தினமும் காலை சாப்பிட்டால் ரத்த சோகை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். கரிசலாங்கண்ணி இலையையும்,கருவேப்பிலை இலையையும் காய வைத்து இடித்து தூள் செய்து இரண்டும் சம அளவு கலந்து கொண்டு காலை மாலை இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து உண்டு வர இரத்த மூலம்,இரத்த சோகை,பெண்களின் மாதவிடாய் சுழற்ச்சி சரியாகும்.

இதன் இலைச்சாறு ஒரு பங்கும் நல்லெண்ணெய் ஒரு பங்கும் சேர்த்து பதமாக காய்ச்சி எடுத்து வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து முழுகி வந்தால் அனைத்து பித்த ரோகங்களும் நீங்கும்.நரை முடி கருக்கும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமலுக்கு கரிசலாங்கண்ணி சாறு பத்து சொட்டும், தேன் 10 சொட்டும் கலந்து வெந்நீரில் சேர்த்து கொடுக்கவேண்டும்.

கரிசலாங்கண்ணி சாறு 100 மி.லி, நல்லெண்ணெய் 100  மி.லி, அதிமதுரம் 10 கிராம் போன்றவைகளை சேர்த்து காய்ச்சி, 5 மி.லி வீதம்  காலையும், மாலையும் சாப்பிட்டால் சளி, இருமல் மற்றும் குரல் கம்மல் குணமாகும்.

கரிசாலையை பால் விட்டு அரைத்து தலையில் தேய்த்து குளித்து வர தலைவலி, தூக்கமின்மை நீங்கும். தலை முடி உதிர்வது நிற்கும். முடி ஆரோக்கியமாக கறுத்து வளரும். கண் நோய் நீங்கும்.சப்த தாதுக்களை வலுப்படுத்தும்.உடலை வலுப்படுத்தும். கண்பார்வை அதிகரிக்கும்.

பல் ஈறுகளில் இரத்தகசிவை குணப்பதும் ஆற்றல் கரிசலாங்கன்னிக்கு உண்டு. இந்த கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, மென்று பல்துலக்கி வந்தால் பற்கள் நல்ல வெண்மை நிறமடையும். ஈறுகள் பலப்படும். அதன் சாற்றை நாக்கு, உள்நாக்கில் மேலும், கீழும் விரல்களால் தேய்த்துவந்தால் மூக்கு, தொண்டை பகுதியில் உள்ள கபம் வெளியேறும்.

இவ்வாறு செய்யும்போது உடலில் பித்தம் அதிகமாக இருந்தால் வாந்தியாக வெறியேறி விடும். இதனால் ஜீரண உறுப்புகள் தூய்மை அடைந்து கல்லீரல், மண்ணீரல், கணையம் போன்றவை நன்றாக வேலை செய்யும்.

சுவாசப்பை கழிவுகள் மற்றும் சிறுநீரகத்தில் உள்ள யூரியா போன்ற கழிவுகளையும் கரிசலாங்கண்ணி நீக்கும். ஒற்றை தலைவலியால் துன்பப்படுகிறவர்கள் இந்த கீரையை மென்று உள்நாக்கில் தேய்க்கவேண்டும். இதன் மூலம் பித்தம் நீங்கி தலைவலி அகலும்.

மேற்கண்டவாறு தினமும் கீரையை மென்று பல்துலக்குவது தந்த சுத்தி என்றழைக்கப்படுகிறது.

பச்சையாக கீரை கிடைக்காதவர்கள் ஒருதேக்கரண்டி கீரை பொடியை கொண்டும் தந்த சுத்தி செய்யலாம்.

கரிசாலை, பூக்காத கொட்டைக் கரந்தை ஆகியவற்றின்சமன் சூரணம் கலந்து நாள் தோரும் காலை, மாலை அரைத் தேக்கரண்டி தேனில் சாப்பிட்டு வர இள வயதில் தோன்றும் நரை மாறும்.