பிரைவேட் நம்பர்

அரசியல் தலைவர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் பயன்படுத்தும் மொபைல் போன்களுக்கு, 'பிரைவேட் நம்பர்' என்ற சிறப்பு வசதி அளிக்கப்படுவது உண்டு.

'எண் அறிய முடியாத தொலைபேசி இணைப்பு வசதி' என, இதற்கு பெயர். அதாவது, அவர்களுக்கு வழங்கப்படும் தொலைபேசி எண்ணை, யாராலும் அறிந்து கொள்ள முடியாது; பாதுகாப்பு கருதி மறைக்கப்படும்.அந்த மொபைல் போனில் இருந்து, அவர்களால் யாருடனும் தொடர்பு கொண்டு பேச முடியும். ஆனால், எதிர்முனையில் பேசும் நபருக்கு, அழைத்தவரது தொலைபேசி எண் தெரியாது. அதற்கு பதிலாக, 'பிரைவேட் நம்பர்' என்ற ஆங்கில வார்த்தைகள் மட்டுமே திரையில் தோன்றும்.இந்த வசதியை அளிப்பதற்காக, தனி, 'ஆப்' வசதியை, தொலைபேசி நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. அதை பெற, முறையாக விண்ணப்பிக்க வேண்டும்.எதற்காக, எண் மற்றவர்களுக்கு தெரியக் கூடாது என்பதற்கான காரணங்களை கூற வேண்டும். அதை பரிசீலித்து, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த வசதியை அளிக்கும்.

பி.எஸ்.என்.எல்., போன்ற அரசு நிறுவனங்கள், அவ்வளவு எளிதாக யாருக்கும், இந்த வசதியை தந்து விடுவதில்லை. மிகவும் கவனமாக பரிசீலித்து, விண்ணப்பிப்பவர் யார், அவர் ஏன் எண்ணை மறைக்க விரும்புகிறார் என்பதை ஆராய்ந்து தான், இந்த வசதியை செய்து கொடுக்கும்.ஆனால், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இவ்வளவு தீவிரமாக ஆய்வு செய்வதில்லை. வாடிக்கையாளர் வசதியும், வியாபாரமும் தான் அவர்களுக்கு முக்கியம்.இதனால், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரும், வி.ஐ.பி.,க்கள் பெயரில், இந்த வசதியை பெற்று விடுகின்றனர். அந்த மொபைல் போன் அழைப்புகளை குறுக்கிடும் உளவு பிரிவினால், எண்ணை அறிய முடியாமல் போய் விடுகிறது.

மேலும், இதுபோன்ற வசதியை ஒருமுறை பெற்றவர்கள், எத்தனை ஆண்டுகளானாலும், அதை பயன்படுத்தும் நிலைமை இருக்கிறது. இதற்கெல்லாம் வரைமுறையும், கட்டுப்பாடுகளும் கொண்டு வர, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.அதன் வெளிப்பாடாக மத்திய அரசு, சமீபத்தில் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதுபோன்ற, 'பிரைவேட் நம்பர்' கேட்டு விண்ணப்பிக்கும், வி.ஐ.பி.,க்கள் மற்றும் ஏற்கனவே இந்த வசதியை பயன்படுத்தி வரும், வி.ஐ.பி.,க்கள் அனைவரையும் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிட்டுள்ளது.அவர்கள், சம்பந்தப்பட்ட மாநில உளவுத் துறை போலீசாருக்கு விண்ணப்பித்து, முறைப்படி அனுமதி பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.ஒருமுறை மட்டுமின்றி, இனி வரும் காலங்களில், ஆண்டுதோறும் இந்த அனுமதியை பெற வேண்டும் என்றும் கூறியுள்ளது.இதனால், தமிழகத்தில் தற்போது இந்த வசதியை பெற்றுள்ள அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், அதிகாரிகள் என, பல தரப்பினரும் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய கட்டாயம் வந்துள்ளது.

இதில், முன்னாள் முதல்வர், தற்போதைய முதல்வரின் தனிச் செயலர்கள், அரசு ஆலோசகர்கள், உளவுத் துறை உயரதிகாரி, உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு இந்த வசதியை நீட்டித்து கொடுத்துள்ளனர். அதே நேரத்தில், மாநில உளவுத் துறையின் ஒப்புதல் கிடைப்பதில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி, நடிகர் கமல் ஹாசன், நடிகை கவுதமி ஆகியோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.