பாகுபலி

இன்று மாலை 6 மணியளவில் எனது நண்பர் பார்த்திபன் படத்திற்கு அழைத்தார். தொடர்ச்சியாக படம் பார்த்து கொண்டிருப்பதால் இன்று போக வேண்டாம் என முடிவெடுத்து பின் அவர் அழைப்பை தட்ட முடியாமல் போன படம் "பாகுபலி"  

இந்த நிமிடம் வரையில் அந்த படத்திலிருந்து மீள முடியாமல் பேச்சடைத்து நிற்கிறேன்.  படத்தின் கதை என்னவோ சூழ்ச்சியும் / துரோகமும் தான். ஆனால் சொல்லப்பட்ட விதமும் எடுக்கப்பட்டவிதமும் சொல்லி மாளாது. ஆங்கில படத்திற்கு சவால் விடும் அளவிற்கு பிரம்மாண்டத்தின் உச்சமாய் இந்த படம் இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை எனக்கு.  பிரம்மாண்டம் என்பதின் முழு வீச்சையும் இந்த படத்தில் கண்டேன். மிக மிக மிக பிரம்மாண்டம்.

அழகாய் கோர்க்கப்பட்ட ஒரு நவரத்ன மாலை.  அலுப்பு ஏற்படாத வண்ணம் நம்மை படத்தின் ஆரம்பம் முதலே கட்டிப் போட்டுவிடுகிறார் இயக்குநர். ஏற்கனவே நமக்கு நல்ல பரிச்சயமான வெற்றி இயக்குனர் தான் எனினும் அவருடைய ஒவ்வொரு படத்திலும் அவர் முத்திரை பதிக்கிறார் என்பது தான் கவனிக்க பட வேண்டிய விசயம். எஸ். எஸ். ராஜ்மௌலி.

கதாபாத்திரத்திற்கு ஏற்றாற் போல் நடிகர் / நடிகைகளை தேர்ந்தெடுத்திருக்கிறார். அனைத்திலும் கவனம் செலுத்தி ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி இருக்கிறார் என்றால் மிகையாகாது. படத்தின் பலமாய் வண்ணமாய் அவரின் எண்ணங்களை கருவிக்குள் கொண்டுவந்த செந்தில் குமாருக்கு பாராட்டுக்கள்

இசையில் மரகதமணி மீண்டும் மணியாக மின்னுகிறார். படத்தின் ஓட்டத்திற்கு தகுந்தாற் போல் பிண்ணனி இசை மிக நேர்த்தியாய் இருக்கிறது. பேரிரைச்சல் இல்லை.

நமது நடிகர்களும் மிக அழகாய் நடித்துள்ளார்கள் அதிலும் கட்டப்பாவாக வந்து நம்மை எல்லாம் நடிப்பில் கட்டி போட்டு விடுகிறார் சத்யராஜ். கை தேர்ந்த நடிப்பு. ரோஹினி  ரம்யா கிருஷ்ணன் அவர்களும் மற்றும் நாசர் அவர்களின் நடிப்பும் மிக அருமை. ( நாசருக்கு இன்னும் பலமான கதாபாத்திரம் கொடுத்திருக்கலாம்)

தமன்னா, அனுஷ்கா , ராணா, தலபர பரணி, சுதீப் இப்படி ஏராளமான நடிகை, நடிகர் பட்டாளாம். குதிரைக்கு கடிவாளம் போட்ட மாதிரி திரைக்கதை... சேணம் கட்டப்பட்ட குதிரையாய் மிக அழகாய் பயணிக்கிறது. ஆங்கில படங்களுக்கு சற்றும் சளைக்காமல் இந்திய படங்கள் வெளிவருவது பாராட்டுகுரியதே. இந்த படத்தை திரையரங்குக்கு சென்று பார்த்தால் தான் உண்மையில் அந்தந்த இடங்களுக்கு நேரில் சென்று பார்க்கும் ஒரு வாய்ப்பை நம் அனைவருக்கும் இயக்குனர் கொடுக்கிறார்.

இயக்குனரின் மகுடத்தில் இன்னுமொர் கல் அது வைரமா, வைடூரியமா, மாணிக்கமா , முத்து, பவளம் இன்னபிற கற்களா..? இவையனைத்தையும் உள்ளடக்கிய கற்கள் ஏதேனும் கிடைத்தால் "எமரால்ட்"
என்று சொல்வார்கள் அரிய வகை கற்களை போல தான் இந்தப் படமும். தயவு செய்து மிகையாக இருந்தால் மன்னியுங்கள்.. இது கம்மியாக இருந்தால் உங்கள் கருத்துக்களையும் சேர்த்திடுங்கள்...

அன்புடன்
ஜெயராமன் பரத்வாஜ்