பட்டா வாங்குவது அவசியமா? அதை எப்படி பெறுவது.

பட்டா வாங்குவது ஏன் மிக அவசியம்.

ஒரு சொத்தை நீங்கள் வாங்கும்போதோ அல்லது வாரிசு உரிமைப்படி உங்களுக்கு எழுதி வைக்கப்படுவதாக இருந்தாலோ அதை சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தால் மட்டும் போதாது அதன் பட்டாவையும் உங்களுடைய பெயரில் மாற்றம் செய்ய வேண்டும். அதை முறையாக வருவாய்த் துறையில் பதிவுசெய்து பட்டா பெற வேண்டும். அதிலும் ஒருவரிடம் இருந்து சொத்து முழுவதையும் வாங்காமல் ஒரு பகுதியை மட்டும் வாங்கி இருந்தால் உடனே பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்துவிட வேண்டும்.

ஏனென்றால் ஒருவர் அவர் சொத்தின் ஒரு பகுதியை மட்டும் விற்பனை செய்து இருந்தால், பட்டா அவர் பெயரில்தான் இருக்கும். நீங்கள் வாங்கிய பகுதிக்கு தனியே பட்டா பெற வேண்டும். அதற்கு உட்பிரிவு பட்டா என்று பெயர். இந்த பட்டாவை உடனே பெறுவது நல்லது. ஏனெனில் பட்டாவுக்கு விண்ணப்பிக்காமல் இருந்துவிட்டால் நீங்கள் வாங்கிய பகுதிக்கும் சேர்த்து உரிமையாளர் பெயரிலேயே தொடர்ந்து பட்டா இருக்கும் என்பதால், சில பிரச்சினைகளை சந்திக்க நேரலாம்.

அதாவது நீங்கள் உட்பிரிவு பட்டா பெறாமல் இருப்பதால், தன்னுடைய பட்டாவை சொத்து வாங்கும் மற்றவரிடம் காண்பித்து முழு சொத்தும் தனக்குரியது! என்று சொல்ல வாய்ப்புண்டு. முக்கியமாக அவர் தன்னுடைய பட்டா மூலம் நீங்கள் வாங்கிய இடத்துக்கும் உரிமை கொண்டாட நேரிடலாம். அல்லது அவர் உங்களிடம் சொத்து விற்பனை செய்யப்பட்ட விஷயத்தை மறைத்து வேறொருவருக்கு விற்க முயற்சிக்கலாம், அதன் மூலம் உங்களுக்கு பிரச்சினை வரலாம். அப்படி விற்பனை நடந்துவிட்டால் சொத்தை வாங்கி இருக்கும் உங்களுக்கு சிக்கல் நேரும். நீங்கள் உட்பிரிவு பட்டா பெறாமல் இருப்பது அவருக்கு சாதகமாக மாறி விடக்கூடும். அதேநேரத்தில் நீங்கள் உட்பிரிவு பட்டா பெற்றுவிட்டால், அந்த சொத்து இரண்டு பாகமாக பிரிக்கப்பட்டு விடும்.  இதோடு உட்பிரிவு எண், பரப்பு, தீர்வை, வரைபடம் போன்றவை மாறுபடும். புதிய உட்பிரிவு எண் அடங்கிய சர்வே எண் வரைபடத்தில் குறிப்பிடப்பட்டும் இருக்கும். அதன் மூலம் அந்த சொத்தில் உங்கள் எல்லைப்பகுதிகள் வரையறை செய்யப்பட்டு இருக்கும். அதனால் உங்கள் சொத்துக் குரிய உரிமை உங்கள் வசம் வந்துவிடும். அதனால் சொத்தின் ஒரு பகுதியை விற்பனை செய்த உரிமையாளர் முழு சொத்துக்கும் உரிமை கொண்டாடுவது தவிர்க்கப்படும்.

பாகபிரிவினை சொத்தா?

அதேபோல் பாகப்பிரிவினை வாயிலாக வந்த சொத்தை வாங்குவதாக இருந்தால் பட்டா விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். விற்பவர்  பெயரில்தான் பட்டா இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். அப்படி பட்டா இருந்தால் தான் நீங்கள் எளிதாக உங்கள் பெயருக்கு எளிதாக பெயர் மாற்றம் செய்ய முடியும்.

அப்படி இல்லாவிட்டால் அதுவும் சிக்கலை ஏற்படுத்தி விடும். பாகப்பிரிவினை செய்த சொத்துக்கு அவர் பட்டா வாங்காமல் இருந்தால் குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரும் உரிமை கொண்டாடும் விதத்தில் பழைய பட்டா இருக்கும். அதில் இருந்து அவர் தனியாக தன்னுடைய சொத்துக்கு பட்டா பெற்ற பிறகே அந்த சொத்தை வாங்குவதற்கு பரிசீலிக்க வேண்டும். அப்போது தான் சொத்தை கிரயப்பத்திரம் செய்த பிறகு அவர் பெயரில் இருக்கும் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய சுலபமாக இருக்கும்.

அப்படி அல்லாமல் பாகப்பிரிவினை அடிப்படையில் பட்டா பெறாமல் இருந்தால் அத்தகைய சொத்தை வாங்காமல் தவிர்ப்பது நல்லது. மேலும் பட்டா வாங்குவதை பிறகு பார்த்துக்கொள்ளலாம்ம் என்று காலம் தாழ்த்தக் கூடாது. சொத்தை விற்பனை செய்தவர் ஒருவேளை இறந்துவிட்டால் அவர் பெயரில் இருக்கும் பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றுவது சிக்கலாகி விடும். அவர்களுடைய வாரிசுகளின் உதவியை நாட வேண்டியிருக்கும். அப்படி பெயர் மாற்றம் செய்வதும் சிக்கலான விஷயமாகவே அமையும். எனவே கிரயப்பத்திரம் வாங்கியதும் உடனடியாக உட்பிரிவு பட்டாவுக்கு விண்ணப்பித்து விடுவது நல்லது.

பட்டா பெறுதல் எப்படி?

பட்டா பதிவு மாற்றம் செய்ய தேவையான விண்ணப்பம் http://www.tn.gov.in/forms/deptname/26  என்ற இணையதளத்தில் கிடைக்கிறது.  இந்த விண்ணப்பத்தை பூர்த்திசெய்து நீங்கள்  வாங்கிய சொத்து அல்லது உங்களுக்கு பாகப்பிரிவினை அடிப்படையில் கிடைக்கப்பட்ட சொத்து எந்தத் தாலுகா அலுவலக எல்லைக்குட்பட்டதோ அந்தப் பகுதி தாசில்தார் அலுவலகத்தில் சமர்பித்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஒரு சர்வே எண் முழுவதும் வாங்கியிருந்து விண்ணப்பித்தால் அதற்கு பட்டா மாற்றம் 15 நாட்களிலும் ஒரு சர்வே எண்ணில் ஒரு பகுதி, பட்டா மாற்றம் (உட்பிரிவு) 30 நாட்களிலும் பட்டா மாற்றம் தாலுகா அலுவலகத்தில் இருந்து நமக்கு செய்து கொடுக்கப்பட்வேண்டும். இதற்கான கட்டணமாக ரூ.80. தாலுகா அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பத்தின் விவரங்கள்

விண்ணப்பதாரர் பெயர், தகப்பனார்/கணவர் பெயர், இருப்பிட முகவரி, பதிவு மாற்றம் கோரும் சொத்து பற்றிய விவரம் (அதாவது மாவட்டம், வட்டம், கிராமத்தின் பெயர், பகுதி எண், நகர அளவை எண்/மறுநில அளவை எண், உள்ளூர் பகுதி/நகரத்தின் பெயர், தெருவின் பெயர், மனைபிரிவு மனை எண், போன்ற விவரங்கள் கொடுக்கப்படவேண்டும்), மனை அங்கீகரிக்கப்பட்டதா, அங்கீகாரம் இல்லாத மனையா, என்பது பற்றித் தெரிவதற்காக மனைப்பிரிவு வரைபடத்தை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். பிறகு சொத்து எந்த வகையில் விண்ணபதாரருக்குக் கிடைக்கப்பட்டது என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட சொத்தை விண்ணப்பதாரர் அனுபவித்து வருவதற்கான சான்றுகளையும் இணைக்க வேண்டும். அதாவது சொத்து வரி ரசீது, மின் கட்டண அட்டை, குடிநீர் வடிகால் இணைப்பு அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை போன்ற சான்றுகளில் ஒன்றை இணைக்க வேண்டும்.

பதிவு மாற்றம் கோரும், இடம் சொத்தின் ஒரு பகுதியாக இருப்பின் உட்பிரிவிற்கு கட்டணம் செலுத்திய விவரம். (சலான் எண்/நாள்/தொகை/செலுத்திய வங்கி/கருவூலத்தின் பெயர்) போன்ற விவரங்களை விண்ணப்பத்தில் கொடுக்கப்படவேண்டும்.

தங்கள் விண்ணப்பத்தை தாலுகா அலுவலகத்தில் கொடுத்து ஒப்புதல் ரசீது வாங்கிக்கொள்ள வேண்டும். குறித்த காலத்துக்குள் பட்டா வழங்கப்படவில்லை என்றால் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கலாம்.