பச்சிளம் குழந்தைகளுடன் உரையாடுங்கள்.

பிறந்த நிமிடம் முதலே தாயின் வாசனையையும் தொடுதலையும் விரும்புகிறது, குழந்தை அம்மாவுடனே தூங்க விரும்புகிறது. அம்மா தன் அருகில் இல்லை என்பதை ஒரு சின்ன அசைவில் இருந்துகூட அது கண்டு கொண்டு விடுகிறது. அடுத்த கணம் அது அழுது தன் கண்டுபிடிப்பை உறுதி செய்து கொள்கிறது. அம்மாவின் குரலை கேட்டபிறகே அழுகையை நிறுத்துகிறது. குழந்தை தூங்கும் வரை, அதன் அருகில் அரவணைத்தபடி பால் கொ டுத்துவிட்டு, தூங்கியதும், புடவையில் கட்டிய தூளியில் போடலாம். தூளி அதிக உயரத்தில் இல்லாமல், தரையோடு இருப்பதுபோல் பார்த்துக் கொள்ளுங்கள்.  தினசரி முறையாகத் தூங்கும் பழக்கம் உடைய குழந்தைகள் படுசுட்டிகளாக விளங்குகின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது. தூங்குவதற்கு முன் குழந்தைகளுடன் உரையாடுவது, கதைகள் சொல்வது ஆகியவை பயனுள்ளதாக அமையும் என்றார்.

தாயின் பேச்சு குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும். குழந்தை பிறந்தது முதல் 6 மாதம் வரை குழந்தையுடன் உரையாடுவதே போதுமானது. இது முக்கியமானதும் நம்மில் பலர் செய்ய தயங்குகிற விஷயமாகும். நாம் பலரும் நினைப்பது போல் குழந்தை பொம்மை அல்ல. அதற்கும் எல்லாம் தெரியும். நாம் பேசும் அனைத்து விஷயங்களையும் குழந்தை கிரகித்துக் கொள்கிறது. ஆகவே குழந்தை பிறந்தது முதல் பெரியவரிடம் உரையாடுவது போல் உரையாடுங்கள்.

எடுத்துக்காட்டாக குழந்தை பால் குடிக்கும் முன் என்னடா செல்லம் பசிக்கிறதா? பால் குடிப்போமா? இப்ப அம்மா பால் தருவேனாம். சமத்தா பால் குடிச்சிட்டு விளையாடுவீங்கலாம். என்று பேசிப்பழகலாம். உறவினர்கள் யாரேனும் வந்தால் உன் அத்தை உங்கள பார்க்க வந்திருகாங்கடா, என்னன்னு கேளு, என்பது போல் உறவினர்களை அறிமுகப்படுத்தலாம். இது போல் எபோழுதும் எது செய்தாலும் குழந்தையிடம் நாம் பேசிக் கொண்டே இருந்தால் குழந்தையின் கேட்கும் திறம் அதிகரிப்பதோடு குழந்தைக்கு பேச வேண்டும் என்ற ஆவலை தூண்டி குழந்தை சீக்கிரம்பேச ஆரம்பித்துவிடும்.

இது தான் உங்கள் குழந்தையை உங்களுக்கு நண்பனாக்கும் தொடக்கமாகும். இவ்வாறு பேசிகொண்டே இருப்பதால் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடையே இடைவெளி இருக்காது. இதனால் எதிர்காலத்திலும் எல்லாவற்றையும் உங்களிடம் உங்கள் குழந்தை பகிர்ந்து கொள்ளும்.