நாளைய சமுதாயத்தின் தூணாக இருப்பவர்கள் இன்றைய இளைஞர்கள்

நாளைய சமுதாயத்தின் தூணாக இருப்பவர்கள் இன்றைய இளைஞர்கள். அவர்களை செம்மைப்படுத்துவதன் மூலம் மேம்பட்ட சமுதாயத்தை உருவாக்க முடியும்.

இளைஞர் மேம்பாடு என்பது இரண்டு முக்கிய இலக்குகளை மையமாகக் கொண்டது. ஆக்கப்பூர்வமாக சமூக செயல்பாடுகளில் ஈடுபட செய்வது முதல் இலக்கு என்று கூறலாம். இதற்காக சுயக்கட்டுப்பாடு, பொறுப்பேற்று செயல்படுதல், சரியாக சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றல், பிறருடன் இணைந்து செயல்படுதல் போன்ற பண்புகளை இளைஞர்களிடம் கொண்டுவர வேண்டும்.

குடும்பத்தில் இளைஞர்களுக்கு ஈடுபாட்டை உண்டாக்குதல், பள்ளி படிப்பில் ஆர்வமுடன் ஈடுபடச் செய்தல், சக நண்பர்கள் சக வயதினரிடம் இசைவுடன் செயல்பட பழக்குதல், வாழும் சமூகத்திடம் சுமூகமாகவும், முழு ஈடுபாடுடனும் நடந்து கொள்ளும் பழக்க வழக்கத்தை ஏற்படுத்துதல், உடல்நலம், மனநலம் பேணுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்றவை இரண்டாவது இலக்கு எனக் கொள்ளலாம்.

இத்தகைய இரண்டு இலக்குகளையும் அடைய வேண்டுமென்றால் கருத்தளவில் 2 முக்கிய அம்சங்களை ஒருங்கிணைத்து ஒரு பயிற்சியை வடிவமைக்க வேண்டும். இதற்கு இளைஞர்களின் அகச்சூழலும், புறச்சூழலும் ஏற்புடையதாக இருக்க வேண்டும்.

இவ்வாறு இரண்டு இலக்குகளையும் ஒருங்கிணைத்து இளைஞர்கள் மேம்பாட்டிற்கான திட்டங்களை வடிவமைத்தல் முழுமையான பலனைத் தரும். எத்தகைய திறன்களை இளைஞர்களுக்கு அளிக்க வேண்டும், எத்தகைய புறச்சூழலில் நிர்ணயித்த இலக்குகளை அடைதல் சாத்தியம் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

சமூக மேம்பாடு சார்ந்த ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் இளைஞர்
களின் மனதில் எவ்வாறு தோன்றுகின்றது என்பதைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அவரவர் வளரும் சூழல்களே ஒருவரிடம் பெரிதும் தாக்கத்தை உண்டாக்குகின்றது என்று உளவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இளைஞர்கள், வாழும் சமூகத்தில் உள்ள மக்களது அங்கீகாரம் மற்றும் சில செயல்பாடுகளுக்கு ஏற்ப கற்றுக் கொண்டு அதன்படி செயல்படுகின்றார்கள். ஒரு செயலை ஒருவர் செய்யும்போது அவருக்கு பாராட்டு கிடைத்தால் அதை பார்க்கும் இளைஞனுக்கு தானும் அதுபோல் நடந்து கொண்டு பாராட்டுப் பெற வேண்டும் என்று தோன்றும். அத்தகைய செயல்களை பலரும் செய்வதற்கு விரும்புவார்கள். திரும்ப திரும்ப செய்வதற்கும் முன்வருவார்கள்.

ஒரு சிறப்பான திறனை கற்பிக்கும்போது அத்தகைய திறன்களை திறம்பட செயல்படுத்துபவர்களை முன் உதாரணமாகக் காட்டுவதன் மூலம் இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்கு உதவலாம். ஒரு செயல்பாட்டை மேற்கொள்வதற்கான திறன்களை இளைஞர்கள் பெற்றிருப்பது மட்டுமல்லாமல் அதை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்ற செயல்படுத்தும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

சாலமன் என்ற உளவியல் வல்லுனர் ஒவ்வொரு வகை கற்றலிலும் உள்ள சிறந்த அம்சங்களை எடுத்துக்கொண்டு கற்று பயன்படுத்த இளைஞர்களை பழக்க வேண்டும் என்கின்றார். ஒருவருக்கொருவர் உதவும் மனோபாவம், ஆக்கப்பூர்வமாக சிந்தனை செய்து செயல்படும் பலர் ஒரு சமுதாயத்தில் முன் உதாரணமாக திகழும்போது அவர்களைப் பார்த்து இளைஞர்களும் அவர்கள் வழி நடக்க ஆரம்பிப்பார்கள். சமூகச்சூழல் இவ்வாறு அமையும்போது பிறரை புரிந்து கொள்ளுதல், அவர்களது நிலையிலிருந்து அவர்களை இனங்காணுதல், பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் போன்ற திறன்களை இளைஞர்கள் பெறுவது எளிது என்கின்றார்.

ஸ்டீபன் க்ளென் என்ற ஆலோசகர் குறிப்பிடும்போது குழந்தைகள் வளர்த்து திறமையான மனிதர்களாக திகழ வேண்டுமென்றால் ஏழு வகையான அறியும் திறன்கள் தேவை என்கின்றார். அவற்றில் முக்கியமான மூன்று திறன்களாவன.

  • முடியும்
  • முக்கியமானவன் / முக்கியமானவள்
  • நானே நினைத்தால்தான் நான் எதிர்கொள்ளும் செயல்பாடுகள் என்மீதுதாக்கத்தை ஏற்படுத்த முடியும். அதாவது விளைவுகளும், நிகழ்வுகளும் என்கட்டுப்பாட்டில்தான் நடைபெறுகின்றது என்று செயல்படும் திறன்.
  • மற்ற நான்கு திறன்களாவது, சுய கட்டுப்பாடு, மற்றவர்களுடன் தொடர்புகொள்ளும் திறன், சூழ்நிலைக்கேற்ப எதிர்கொள்ளும் திறன், சரியாக ஆராய்ந்துஅறிந்து முடிவெடுக்கும் திறன் ஆகியவையாகும்.

சமூகத்தின் மீதும், மக்களின் மீதும், குடும்பத்தின் மீதும் அக்கறையுடனும், ஈடுபாட்டுடனும் செயல்பட்டால்தான் சமூக சீர்கேடுகள் குறையும் வாய்ப்பு ஏற்படும். குடும்பம், பள்ளி, நண்பர்கள், சமூகத்தின் மீது அக்கறை குறையும்போது எதிர்மறை எண்ணங்களும் செயல்பாடுகளும் தோன்றும்.

இளைஞர்கள் மேம்பட சமுதாயத்தில் இருக்க வேண்டிய ஏழு முக்கியமான அம்சங்கள்.

எப்போதுமே இளைஞர்கள் ஆக்கப்பூர்வமாகத்தான் செயல்படுவார்கள் என்று சமுதாயம் நம்பிக்கை வைத்திருப்பதை தெரியப்படுத்த வேண்டும். கல்விக்கூடங்களில் கற்பிக்கும்போதே இத்தகைய நோக்கம் சார்ந்த விதிமுறைகளை உருவாக்கி இளைஞர்களை ஈடுபடுத்த வேண்டும்.

தேசிய நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சிலுவைச் சங்கப்பணிகள், தேசிய மாணவர் படை, சாரணர் படை, சுற்றுப்புறச்சூழல் குழு போன்றவற்றில் மாணவ, மாணவியரை உறுப்பினர்களாக்கி சமூகப்பணியில் பங்கேற்கச் செய்ய வேண்டும்.

ஆசிரியர்கள் கனிவுடனும், அக்கறையுடனும் மாணவர்களிடம் நடந்து கொள்ளும்போது வகுப்பறைகளில் கற்கும் சூழல் மேம்படும். மாணவ, மாணவிகளின் செயல்பாடுகளிலும் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் ஏற்படும்.

ஏற்றுக்கொண்ட விதிமுறைகளை மாணவ, மாணவியர் விரும்பி பின்பற்றும் வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும். யாராக இருந்தாலும் எது சரியோ அதைத்தான் கடைப்பிடிக்க வேண்டும் இல்லாவிட்டால் ஏற்படும் விளைவுகளையும் தெரியப்படுத்த வேண்டும். விதிமீறல் இல்லாமல், பாராபட்சமின்றி நடைமுறைப்படுத்தும்போது தானாகவே நாளடைவில் சுய கட்டுப்பாடு இளைஞர்களிடம் ஏற்பட்டுவிடும்.

குழுவிவாதம், குழுவாக கற்கும் மனப்பான்மையை வளர்த்தல், கேட்கும் ஆற்றலை மேம்படுத்துதல் மற்றும் அனுபவமிக்க பலதுறை வல்லுனர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தல் போன்றவற்றின் மூலம் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளுதல், மதித்து செயல்படுதல், இணைந்து செயல்படுதல் போன்ற ஆற்றல்களை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.

ஒருவரை ஒருவர் மதித்து பழகும் மனோபாவம், யாரையும் குறைத்து மதிப்பிடாமல் அல்லது மதிப்பீடு செய்யாமல் பழகும் சூழல் ஏற்படும்போது பய உணர்வு, பாதுகாப்பின்மை போன்றவை நிகழாது. அனைவரும் ஒரு வகையான பாதுகாப்பான உணர்வுடன் செயல்படும் சூழல் ஏற்படும். அப்போதுதான் ஒவ்வொருவரும் அவர்களது திறன்களை தயக்கமின்றி வெளிப்படுத்த முடியும்.

இளைஞர் மத்தியில் எவ்வாறு ஈடுபாட்டை ஏற்படுத்த வேண்டுமென்றால்...

  • சுறுசுறுப்பாக செயல்பட செயல் களத்தை உருவாக்க வேண்டும்.
  • ஆர்வமாகவும் செயல்படும் திறனை இளைஞர்களிடம் வளர்க்க வேண்டும்.
  • செயல்படுவதற்கேற்ப அவ்வப்போது பரிசு/ பாராட்டுதலை வழங்கிஊக்கப்படுத்துதல்.

ஆசிரியர்கள் வழிகாட்டி ஆலோசகர்களாக செயல்பட்டு உரிய தகவல்களை அளித்து, சரியான சமூக செயல்பாட்டிற்கு அங்கீகாரம் அளித்து பாராட்டும்போது மாணவர்களிடமும் எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது குறையத் தொடங்கும்.

நன்றி:- .சுரேஷ்குமார்