தேர்வுக்கு தயாராவது எப்படி:-

தேர்வு நெருங்கிக்கொண்டு இருக்கிறது. பத்திரிக்கையிலும்,தொலைக்காட்சியிலும் எப்படி படிக்க வேண்டும் என்ற அறிவுரைகளை தொடங்கி விட்டார்கள். நாமும் எப்படி படிக்க வேண்டும் என்பதை இந்த கட்டுரையில் தெளிவுபடுத்த இருக்கிறோம்.

பெற்றோர்களின் கவனத்திற்கு:-

முதலில் தங்கள் வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டியில் கண்ட கண்ட நாடகங்கள் மற்றும் தேவையற்ற நிகழ்ச்சிகளை தாங்களும் பார்க்காதீர்கள். பிள்ளைகளையும் பார்க்க விடாதீர்கள். முடிந்தளவு தொலைக்காட்சியை நல்ல நிகழ்ச்சிகளுக்கும், செய்திகளை தெரிந்து கொள்ளவும் மட்டும் பயன்படுத்துங்கள்.

தேர்வு நேர உணவுமுறைகள்:-

படிக்கிற மாணவர்கள் இப்போது அதிகம் சாப்பிடுவது சிப்ஸ், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பிஸ்கெட்கள், இனிப்பு பானங்கள் போன்றவற்றைத்தான். இந்த உணவுகளைச் சாப்பிட்டால் மூளை சோர்ந்து போகும். பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களில் ஜீனி என்கிற வெள்ளைச் சர்க்கரை கலக்கப்பட்டிருக்கும். அந்த இனிப்புச் சத்து உடலுக்குள் போனதுமே கணையம் வேலை செய்ய ஆரம்பித்துவிடும். இனிப்பைச் செரிக்கச் செய்வதற்கு இன்சுலின் அதிக அளவில் சுரக்க ஆரம்பித்துவிடும். இன்சுலின் அதிக அளவில் சுரந்தால் உடனே மூளை சோர்ந்து போகும். எனவே தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்கு இம்மாதிரியான உணவுகளைக் கொடுக்கக் கூடாது. மூளை சோர்ந்து போனால் எப்படி நன்றாகப் படிக்க முடியும்? படித்ததை நினைவில் வைத்துக் கொள்ள முடியும்?

வயிறு நிரம்ப சாப்பிட்டால் தூக்கம் வரகூடும் அதனால் கவனத்தை படிப்பில் செலுத்த முடியாமல் போகலாம் எனவே  2 அல்லது 3 மணி நேர இடைவெளியில் பாதி அல்லது முக்கால் வயிறு சாப்பிடுவது நல்லது.

தேர்வுநேரங்களில் தொடர்ந்து படிப்பதால் சோர்வடயகூடும், இந்நேரங்களில் பழ ஜூஸ், காய்கறி சூப், பழசாலட், காய்கறி சாலட், மோர், இளநீர், பிஸ்கட் போன்றவற்றை உணவு வேளைக்கு இடையில் எடுத்துக் கொள்வதால் களைப்படைதலை தவிர்க்கலாம்.

மலச்சிக்கலை தவிர்க்க நார்ச்சத்துள்ள காய்கறிகள், கீரை வகைகள், நீர் ஆகாரங்களை அடிக்கடி எடுக்க வேண்டும்.

ரத்தசோகை ஏற்படாமல் இருக்க இரும்புச் சத்துள்ள உணவுகள், பேரிட்சை, திராட்சை, தர்பூசணி, சோயாபீன்ஸ், காராமணி, சுண்டைக்காய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கம்பு, சோளம், கேழ்வரகு, திணை, சாமை, தீட்டப்படாத அரிசி, கோதுமை போன்ற தானியங்களில் செய்யப்பட்ட உணவு வகைகள் தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு மிகவும் உகந்தது. இந்த தானியங்களில் உள்ள நுண்ணுயிர் சத்துகள் மூளைக்குச் சக்தியைத் தருகின்றன.

முளைகட்டிய பச்சைப் பயறு, கடலைப் பருப்பு, கொண்டைக் கடலை போன்றவற்றை மாணவர்களுக்குக் கொடுக்க வேண்டும். இவற்றில் புரதம், கார்போஹைடிரேட், நல்ல கொழுப்பு உள்ளது. எள் உருண்டை, எள் துவையல் மாணவர்களுக்கு மிகவும் நல்லது. சுத்தமான குடிதண்ணீரை அல்லது காய்ச்சி வடித்த குடிநீரை அருந்த வேண்டும். மூளைக்கு ஆற்றல் தருவதோடு, அதனுடைய ரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.

காலை உணவு சாப்பிட்டால் படிப்பதற்கு சோம்பேறித்தனம் ஏற்படும் என மாணவர்கள் நினைக்கிறார்கள். இது தவறான கருத்து. காலை உணவை முடிந்த வரை நன்றாக உண்ண வேண்டும். இரவு நேரங்களில் உணவை குறைத்து கொள்வதில் தவறில்லை.

தூங்காமல் படிப்பதற்கு அடிக்கடி டீ, காபி அதிகம் குடிப்பீர்கள், இதனால் சுறுசுறுப்பு ஏற்படும். அதே நேரத்தில் உடலில் பித்தத்தை அதிகப்படுத்தி விடும். குறைவாக டீ, காபி குடிப்பது நல்லது. இதைவிட சூடான பால் குடிப்பது சிறந்தது.

 

பயிற்சி முறைகள்:-

திட்டமிடும் காரியத்தைத்தான் ஒழுங்காக நாம் செய்ய முடியும்.

படிப்பதற்கு ஏற்றாற்போல் கால அட்டவணையை தயாரித்துக் கொள்ள வேண்டும். இதன்மூலம் பாடத்திட்டத்தின் பாரத்தை எளிதில் குறைத்து விரைவில் படித்து முடித்துவிடலாம். ஒவ்வொரு மாணவரும் தினமும் எவ்வளவு நேரம் படிக்க வேண்டும் என்று வரையறுக்க வேண்டும். வாரத்தில் 6 நாட்கள் இதை பின்பற்றலாம். 7வது நாளன்று விட்டுப்போன பாடங்களை நினைவில் வைத்துக் கொண்டு திரும்ப படிக்கலாம்.

மாணவ மாணவியர்களே! நீங்கள் மிக முக்கியமாக கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது. ஒரு கேள்விக்கான பதிலை படித்து முடித்தவுடன் படித்ததை உடனடியாக ஒரு நோட்டில் எழுதி பார்த்துக் கொள்ளுங்கள்.

நாட்கள் இருக்கிறது படித்துக் கொள்ளலாம் என்று இருந்து விடாதீர்கள். காலத்தை வீண் விரயம் செய்யாமல் படிக்க ஆரம்பித்து விடுங்கள்.

சில மாணவர்கள் இரவு நேர படிப்பை விரும்புவர். அவர்கள் காலையில் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். பகல் நேர படிப்பை விரும்பும் மாணவர்கள் இரவு நேரங்களில் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.

சில மாணவர்கள் இரவு, பகல் தூங்காமல் கண் விழித்துப் படிப்பார்கள். தேவையான அளவுக்குத் தூங்காவிட்டால் படித்தது நினைவில் நிற்காது. படித்த பின்பு தூங்கிவிட்டால் படித்ததெல்லாம் மறந்துபோய்விடும் என்று சில மாணவர்கள் நினைப்பார்கள். அது தவறு. எனவே நாளைக்கு தேர்வு என்றாலும் தேவையான அளவு தூங்க வேண்டும்.

குறிப்பாக மனப்பதட்டத்தை தவிர்க்க வேண்டும். என்னாகுமோ, ஏதாகுமோ என்ற மனபயத்தில் இருந்தால் படிக்கும் பாடங்கள் மனதில் தங்காது. பெற்றோரும் தேர்வு நேரங்களில் மாணவர்களை தொந்தரவு செய்யக்கூடாது. அதை செய், இதை செய் என்று நிர்பந்திக்கக்கூடாது. டிவி, இன்டர்நெட்டை தவிர்க்க வேண்டும்.