தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து

TN Images: 

தமிழக முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாட்டு மக்களுக்கு  புத்தாண்டு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர்

"புத்தாண்டு மலர்கின்ற இந்த இனிய நாளில் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போடச் செய்ய வேண்டும் என்பதும், இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்க வேண்டும் என்பதும் தான் தனது அரசின் குறிக்கோள் என்று சூளுரைத்து, தமிழக மக்களின் நல்வாழ்விற்காக அயராது பாடுபட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவை நனவாக்கிட, அவர் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, அவர் வகுத்த எண்ணற்ற திட்டங்களை சிறப்பான முறையில் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

தமிழக மக்களின் விருப்பங்கள் மற்றும் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத் திட்டங்களை மக்கள் அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்தி, ஒற்றுமையுடன் அயராது உழைத்து, வளமும் வலிமையும் மிக்க தமிழ்நாட்டை உருவாக்கிட இந்தப் புத்தாண்டில் உறுதியேற்போம்.

இந்தப் புத்தாண்டு தமிழக மக்களுக்கு மங்காத எழுச்சியையும், நிறைவான வளர்ச்சியையும், நீங்காத வளங்களையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, தமிழக மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்."

என்று குறிப்பிட்டுள்ளார்.