செல்வி ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார்.

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். ஆளுநர் திரு. ரோசய்யா அவர்கள், முதல்வர் ஜெயலலிதாவிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய அமைச்சரவை பட்டியலை ஆளுநரிடம் முதல்வர் ஜெயலலிதா சமர்பித்தார்.  பதவியேற்பு வைபவத்தில் தமிழகத்தின் முக்கிய தலைவர்களும், திரையுலக பிரமுகர்களும் பதவியேற்பு விழாவிற்கு வந்திருந்தனர். 

5–வது முறையாக தமிழக முதலமைச்சராக இன்று ஜெயலலிதா பதவி ஏற்றுக் கொண்டார். கவர்னர் ரோசய்யா பதவிப் பிரமாணமும், ரகசியகாப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார்.ஜெயலலிதா தலைமையில் 28 அமைச்சர்களும் இன்று பதவிப் பிரமாணமும், ரகசியகாப்பு உறுதிமொழி ஏற்பும் ஏற்றுக் கொண்டார்கள்.பதவி ஏற்பு விழாவில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாரதீய ஜனதா தலைவர்கள் இல.கணேசன், எச்.ராஜா மற்றும் தோழமை கட்சி தலைவர்கள் வந்திருந்தனர்.

பதவி ஏற்பு விழா நிகழ்ச்சி சென்னை கடற்கரை சாலையில் உள்ள பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றது.
28 அமைச்சர்களும் 2 பிரிவுகளாக பதவி ஏற்றுக் கொண்டனர்.பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்த பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் நிரம்பி வழிந்தது. மண்டபத்துக்கு வெளியேயும், கடற்கரை சாலை நெடுகிலும் மக்கள் வெள்ளமென திரண்டிருந்தனர்.
பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா காலை 10–58 மணிக்கு வந்தார். அவர் வருகையை கண்டதும் மண்டபத்தில் நிறைந்திருந்தவர்கள் ‘அம்மா வாழ்க’, ‘முதலமைச்சர் புரட்சித்தலைவி வாழ்க’ என்று உற்சாகத்துடன் குரல் எழுப்பினார்கள்.
அமைச்சர்கள் வரவேற்பு. முதலமைச்சர் ஜெயலலிதா காரில் இருந்து இறங்கியதும் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி, பழனியப்பன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். ஜெயலலிதா பச்சை நிற சேலை அணிந்து வந்தார்.பதவி ஏற்பு விழா மேடைக்கு ஜெயலலிதா வந்ததும் அங்கு கூடியிருந்தவர்கள் ‘அம்மா வாழ்க’ என்று எழுந்து நின்று உற்சாகத்துடனும், எழுச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்த்து முழக்கம் எழுப்பினார்கள். மேடையில் நின்று அனைவருக்கும் இருகரம் கூப்பி வணக்கம் செலுத்தி அவர்களது அன்பு வரவேற்பை முதல்வர் ஜெயலலிதா பெற்றுக் கொண்டார். பின்னர் மேடையில் உள்ள இருக்கையில் அமர்ந்தார். பின்னர் மேடையில் இருந்த அவரவர் இருக்கைகளில் பதவி ஏற்க இருந்த அமைச்சர்கள் அமர்ந்தனர்.
11 மணிக்கு கவர்னர் மண்டபம் வந்தடைந்தார். 11–02 மணிக்கு விழா நடக்கும் மேடைக்கு கவர்னர் ரோசய்யா வந்தார். கவர்னருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பெரிய பூங்கொத்து கொடுத்து மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.பின்னர் பதவி ஏற்க இருக்கும் 28 அமைச்சர்களையும் ஒவ்வொருவராக கவர்னருக்கு ஜெயலலிதா அறிமுகம் செய்து வைத்தார். ஒவ்வொருவரும் கவர்னரிடம் வந்து வாழ்த்து பெற்றனர்.
11–06 மணிக்கு பதவி ஏற்பு விழா நிகழ்ச்சி துவங்கியது. முதலில் சுருக்கமாக நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

ஜெயலலிதா முதலமைச்சராக பதவி ஏற்க அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசியகாப்பு உறுதிமொழியும் செய்து வைக்குமாறு கவர்னரை தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் கேட்டுக் கொண்டார்.
இதனை தொடர்ந்து 11–07 மணிக்கு ஜெயலலிதாவுக்கு கவர்னர் ரோசய்யா பதவிப் பிரமாணமும், ரகசியகாப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். ஆண்டவன் பெயரில் ஜெயலலிதா பதவி ஏற்பு உறுதிமொழியும், ரகசியகாப்பு  உறுதிமொழியும் எடுத்து கொண்டார். பின்னர் உறுதிமொழி பத்திரத்தில் ஜெயலலிதா கையெழுத்திட்டார். அப்போது அங்கு குழுமியிருந்தவர்கள் ‘அம்மா வாழ்க’ என்று நீண்டநேரம் வாழ்த்து முழக்கமிட்டு கொண்டிருந்தார்கள்.

கவர்னர் பூங்காத்து கொடுத்து வாழ்த்து

பதவி ஏற்ற ஜெயலலிதா 11–10 மணிக்கு தனது இருக்கைக்கு வந்தார். அப்போது ஜெயலலிதாவுக்கு கவர்னர் ரோசய்யா பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதன் பின் அமைச்சர்கள் 28 பேரும் 2 பிரிவுகளாக பதவி ஏற்றுக் கொண்டனர்.முதல் பிரிவில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், ஆர்.வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி, ப.மோகன், பா.வளர்மதி, பழனியப்பன், செல்லூர் ராஜு, இரா.காமராஜ், பி.தங்கமணி, வி.செந்தில் பாலாஜி, எம்.சி.சம்பத், எஸ்.பி.வேலுமணி, டி.கே.எம்.சின்னையா, ஆகிய 14 பேரும் ஒன்று போல நின்று பதவி ஏற்பு உறுதிமொழியும், ரகசியகாப்பு உறுதிமொழியும் எடுத்து கொண்டனர். பதவி ஏற்றுக் கொண்டதும் ஒவ்வொரு அமைச்சரும் ஜெயலலிதாவிடம் வந்து ஆசி பெற்று சென்றார்கள். கவர்னரிடமும் கைகுலுக்கி வாழ்த்து பெற்றனர். இரண்டாவது பிரிவில் அமைச்சர்கள் எஸ்.கோகுல இந்திரா, எஸ்.சுந்தர்ராஜ், எஸ்.பி.சண்முகநாதன், பி.சுப்பிரமணியன், கே.ஏ.ஜெயபால், முக்கூர் சுப்பிரமணியன், ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி, பி.வி.ரமணா, கே.சி.வீரமணி, தோப்பு வெங்கடாசலம், பூனாட்சி, அப்துல் ரகீம், டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகிய 14  அமைச்சர்கள் 2–வது பிரிவில் பதவி ஏற்றுக் கொண்டனர்.28 அமைச்சர்களும் ஆண்டவன் மீது உறுதி கூறி பதவி ஏற்பு உறுதிமொழியும், ரகசியகாப்பு பிரமாணமும் எடுத்து கொண்டனர்.இரண்டாவது பிரிவில் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டவர்களும் ஒவ்வொருவராக ஜெயலலிதாவிடம் சென்று ஆசி பெற்றார்கள். கவர்னரிடமும் வந்து வாழ்த்து பெற்றார்கள். 11–22 மணிக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிந்தது. இறுதியாக நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. 17 நிமிடத்தில் பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிவடைந்தது.
பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிந்ததும் கவர்னருடனும், பதவி ஏற்ற முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் 28 அமைச்சர்களும் குழு (குரூப்) புகைப்படம் எடுத்து கொண்டனர்.தனித்தனியாக ஒவ்வொரு அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டால் கிட்டத்தட்ட ஒருமணி நேரத்துக்கும் மேலாகும். ஆனால் இப்போது 2 பிரிவாக அமைச்சர்கள் வரிசையாக நின்று ஒரே நேரத்தில் பதவி ஏற்றுக் கொண்டதால் 17 நிமிடத்தில் நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிவு பெற்றது.

பார்லிமெண்ட் துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அரசு கொறடா மனோகரன், மேயர் சைதை துரைசாமி, தோழமை கட்சி தலைவர்கள் சரத்குமார் எம்.எல்.ஏ., செ.கு.தமிழரசன் எம்.எல்.ஏ., கதிரவன் எம்.எல்.ஏ., தனியரசு எம்.எல்.ஏ. மற்றும் ஷேக்தாவூத், ஒய்.ஜவஹர் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திரை உலக பிரமுகர்கள் , நடிகர்கள்   ரஜினிகாந்த், சிவகுமார், பிரபு, கார்த்தி, அர்ஜுன், விக்ரம் பிரபு, விவேக், செந்தில், ஆனந்தராஜ், ராமராஜன், தியாகு,நடிகைகள்  எம்.என்.ராஜம், விந்தியா, வெண்ணிற ஆடை நிர்மலா, குமாரி சச்சு, இசை அமைப்பாளர் இளையராஜா, பாடகி பி.சுசீலா, டைரக்டர்கள் விக்ரமன், மனோபாலா, உதயகுமார் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் உட்பட ஏராளமான திரை உலக பிரமுகர்கள் வந்திருந்தனர்.