சிரியா உள்நாட்டுப் போர் தற்காலிக நிறுத்தம்!

டிசம்.30- கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து சிரியா அதிபர் பாஷர் அல் அசாத் அரசுப் படைகளுக்கும் அவரது அரசை வீழ்த்த முனைந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே நடந்து வந்த போரில் இதுவரை 3 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், முதன் முறையாக நாடு தழுவிய அளவில் போர் நிறுத்தம் அமல்படுத்தப் பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் போர் நிறுத்தம் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்று சிரியா ராணுவம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. து.

சிரியா, ரஷ்யா மற்றும் துருக்கி ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையேயான உடன்பாட்டின் அடிப்படையில் இந்தப் போர்நிறுத்தம் அமலாகி யுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு ரஷ்யா, துருக்கி மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் உத்தரவாதம் அளிக்கின்றன போர்நிறுத்தக் கண்காணிப்பை ரஷ்யாவும் துருக்கியும் மேற்கொள்ளவுள்ளன.

சிரியாவின் அரசுத் தரப்பும் கிளர்ச்சிப் போரில் ஈடுபட்டுள்ள பல்வேறு படை அணிகளும் இந்த உடன்பாட்டில் சம்பந்தப்பட்டுள்ளன என்றாலும் கிளர்ச்சித் தரப்பைச் சேர்ந்த ஐஎஸ் படைப் பிரிவு மற்றும் குருதிஷ்தானிய படை ஆகியவை இந்த உடன்பாட்டில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  இஸ்லாமிய அரசு எனப்படும் அமைப்புக்கு எதிரான வான் தாக்குதலை ரஷ்யா தொடர்கிறது.

சிரியாவில் நடைபெற்று வந்த அனைத்துத் தாக்குதல் நடவடிக்கைகளும் போர்நிறுத்தப்பட்டதால், அமலுக்கு வந்த சில மணிநேரங்கள் வரை சிரியா முழுவதும் சண்டை எதுவும் நடக்கவில்லை. இந்தப் போர்நிறுத்தம் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டால், பின்னர் கசகஸ்தானில் சிரியா மீதான நிரந்தர அமைதிக்கானப் பேச்சுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டுள்ள இந்த போர்நிறுத்தம் தொடர்ந்து சிரியா சீராகவேண்டும் என்பதே அனைவருடைய  விருப்பமாகும்.