கபடி... கபடி....

தமிழரின் விளையாட்டு ஒன்று உலக அளவில் இடம்பிடித்திருகிறது என்றால் அது கபடிதான்.

சடுகுடு, பலிஞ்சடுகுடு, கபடி என்றெல்லாம் கபடி விளையாட்டு அழைக்கப்படுகிறது. இது இளைஞர்களும், சிறுவர்களும் விரும்பி ஆடும் விளையாட்டாகும் . கபடி விளையாட்டு தமிழர்களின்  பாரம்பரியத்தோடு பின்னிப் பிணைந்தது. வீரத்தோடு தொடர்புடையது, எப்படிஎன்றால் இது ஜல்லிக்கட்டிற்கு(ஏறு தழுவுதல்) தயாராகும் முன் ஆயர்கள் செய்யும் பயிற்சியே கபடி என்ற பெயரால் பல காலமாக விளையாடப்பட்டு வருகிறதாக கூறப்படுகிறது.

முன்பெல்லாம் இளைஞர்கள் இதனை பெரிதும் விரும்பி விளையாடுவார்கள். சில நேரங்களில் கால் முட்டி பெயர்ந்து விடும். கைகளில் நெஞ்சில் சிராய்ப்புகள் ஏற்படும்.  அடுத்த நாள் குளத்து தண்ணீரில் குளிக்கும்போது ஏற்படும் எரிச்சலை வைத்துதான் எங்கெங்கு அடிபட்டிருக்கிறது என்பது தெரியவரும். அதற்காக அவர்கள்  ஒருபோதும் கவலைப் பட்டதும் இல்லை. இப்போதெல்லாம் ஊர்ப்பக்கம் சென்றால், சின்னப்பசங்க எல்லாம் கையில பேட் பந்தோட சுத்துறாங்க. கேட்டால், லை.'.ப்  ஸ்டைல் மாறிப்போச்சாம்...

கிராமத்து மந்தைகளிலும் ஆற்று மணலிலும் இவ்விளையாட்டு ஆடப்படும். இது விதிமுறைகளுடன் கூடிய விளையாட்டு ஆகும். ஆடுவோர் இரு அணியினராகப் பிரிந்து அணிக்கு ஏழு பேராகவோ, ஒன்பது பேராகவோ, சேர்ந்து ஆடுவர். "கபடிக் கபடி" என்று மூச்சிவிடாமல் பாடிச் செல்வது கபடி விளையாட்டின் அடிப்படையாகும். முதல் அணியைச் சேர்ந்தவர் பாடிக் கொண்டே இரண்டாம் அணியினர் இருக்கும் பகுதிக்குச் சென்று, ஒருவரையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவரையோ.  கைகளாலோ அல்லது கால்கலாலோ தொட்டு அகப்படாமல் திரும்பி வரவேண்டும், அகப்பட்டால் சென்ற வர் ஆட்டமிழப்பார். அதேபோல் இரண்டாம் அணியினரும் செய்ய வேண்டும். எந்த அணி அதிகப் புள்ளிகள் எடுக்கின்றதோ அது வெற்றி பெற்றதாகக் கருதப்படும். கபடி விளையாட்டு இன்று உலகம் முழுவதும் பரவி ஒலிம்பிக்கில் இடம்பெறும் அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளது. இது தமிழர்களுக்கு மகிழ்சியையும் பெருமையையும் தரக்கூடிய ஒன்றாகும்.

சடுகுடு விளையாட்டில்
நாந்தான் வீரன்டா நல்ல முத்து பேரன்டா
வெள்ளிச் சிலம்பெடுத்து விளையாட வாரன்டா
தங்கச் சிலம்பெடுத் துத் தாலிகட்ட வாரன்டா
சடு குடு சடுகுடு சடுகுடு சடு குடு.
கீத்து கீத்துடா கீரைத் தண்டு டா
நட்டு வச்சன்டா பட்டுப் போச்சுடா போச்சுடா போச்சு டா….

என்ற பாடல் 1970வரை மிகவும் பிரபலமானது.

இந்த விளையாட்டில் பாடிச்செல்பவர் தொடையை ஓங்கி தட்டி, ஆக்ரோஷமாக களமிறங்கும் போதே ஆட்டம் விறுவிறுப்பாகும். பாடிசென்றவரின்  கவனம் தன்னைச்சுற்றியுள்ள எதிராளிகளை கூர்ந்து கவனித்துகொன்டே இருக்கும். எதிரி  தன்னை நெருங்கவிடாமலும் அதே சமயத்தில் யாரையாவது ஒருவரையாவது தொட்டுவிட்டு வெளியேறும்போது எதிரியின் நகர்வை கணிக்ககூடிய திறமையும், யாரிடமும் பிடிபடாமலோ அல்லது பிடிபட்டாலும் அவர்களை உதறித்தள்ளி எல்லைகோட்டை தொடும்போது வலிமையும் வெளிப்படுகிறது. இந்த விளையாட்டுக்காக செய்யப்படும் மூச்சிபயிற்சி இந்த விளையாட்டு வீரர்களின் நுரையீரலையும் இதயத்தையும் வலுப்படுத்துகிறது