கனவாகி வரும் கண்ணாமூச்சி விளையாட்டு

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமங்களின் வீதிகளில் சிறுவர்களும், சிறுமியர்களும் கூட்டம் கூட்டமாய் கூடி விளையாடிக்கொண்டிருப்பார்கள். இன்றைக்கு தொலைக்காட்சிகளின் ஆக்கிரமிப்பு தவிர கல்வியில் போட்டி என்ற பெயரில் அளவிற்கு அதிகமான வீட்டுப்பாடங்களை திணிப்பனாலும் விளையாட்டு என்பதே குழந்தைகளுக்கு மறந்து விட்டது. ஓடி ஆடி தெருக்களில் குழுவாக விளையாடியதை இனி கதைகளில் மட்டுமே படிக்க வேண்டும் போல ஏனென்றால் இன்றைய தலைமுறையினருக்கு விளையாட்டு என்றாலே அது கிரிக்கெட்தான் நினைவுக்கு வருகிறது. அந்த அளவிற்கு கிரிக்கெட்டின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. மறந்து கொண்டிருக்கும் கிராமத்து விளையாட்டுக்களை நினைவு படுத்தவே இந்த கட்டுரை.

கிராமத்து விளையாட்டுக்கள் விளையாட்டுக்கள் வீட்டினுள் விளையாடுவது ஒரு வகை. வீட்டிற்கு வெளியே சென்று ஆடுவது மற்றொன்று. ஆடுபுலி ஆட்டம், கபடி, சல்லிக் கட்டு, உறியடி, வழுக்கு மரம், சிலம்பாட்டம், வண்டிப் பந்தயம். கால்தூக்கிக் கணக்குப் பிள்ளை, பந்து, பச்சைக் குதிரை, பம்பரம், புளியங் கொட்டை, கபடி, கள்ளன் போலீஸ் இவை சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான விளையாட்டு பல்லாங்குழி, தாயம், சில்லுக் கோடு, தட்டா மாலை, கும்மி, கோலாட்டம், பாண்டி, கண்ணா மூச்சி, பூசணிக்காய், குலைகுலையா முந்திரிக்காய், எலியும் பூனையும், ஒரு குடம் தண்ணி ஊத்தி, பூப்பறிக்க வருகிறோம், கரகர வண்டி, சில்லுக் கோடு, பூப்பறிக்க வருகிறோம், கிச்சுக் கிச்சுத் தாம்பாளம், பல்லாங்குழி, கொழுக்கட்டை, நொண்டி இவை சிறுமியர்கள் மற்றும் குமரிப்பெண்களுக்கான விளையாட்டு. இளமைக்காலம் முழுவதும் விளையாடித் திரிந்ததால்தான் நமக்கு இன்றுவரை விளையாட்டாய் இருக்கிறது வாழ்க்கை. நாட்டுப்புறங்களில் 126 வகை விளையாட்டுக்கள் விளையாடப்பட்டதாக வரலாற்றுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இவற்றில் கண்ணாமூச்சி, உருண்டை திரண்டை, அந்தக் கழுதை இந்தக் கழுதை, கல்லுக் கொடுத்தான் கல்லே வா, ராஜா மந்திரி, பருப்புக் கடைந்து, அத்தளி புத்தளி, கில்லாப் பறண்டி, அக்கக்கா கிளி செத்துப்போச்சு, சீப்பு விக்கிது. தொட்டுப் பிடிச்சு, ஐஸ் பால் போன்ற விளையாட்டுகள் ஒரே குழுவாக விளையாடும் விளையாட்டுகளாகும். இந்த விளையாட்டுகளில் தாய்ச்சி எனப்படும் தலைவர் ஒருவர் இடம் பெற்றிருப்பார். மெல்லவந்து மெல்லப்போ, பூச்சொல்லி போன்ற விளையாட்டுகளில் இரு உத்திதார் இருக்கிறார்கள். இவை அணி பிரிந்து விளையாடும் விளையாட்டுகள். குழுவாக பிரிந்து விளையாடும் சில விளையாட்டுக்களில் உத்திதாய்ச்சி எனப்படும் துணைத்தலைவர் இடம்பெற்றிருப்பார்.

 கண்ணாமூச்சி விளையாட்டில் தலைவராக கருதப்படுபவர், குழுவில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுக்கிறார். அவரை பட்டவர் என்று கூறுகின்றனர். அவரது கண்ணினை, தலைவர் மூடிக்கொள்ள, மற்ற குழந்தைகள், ஓடி ஒளிந்து கொள்வர். அவர்கள் ஓடி ஒளிந்து கொள்ளும் நேரத்தில் தலைவரானவர்

“கண்ணா மூச்சி ரேரே…

காரே முட்டே ரே ரே …

ஒருமுட்டையை தின்னுபுட்டு….

ஊளை முட்டைய கொண்டுவா …."

என்று பாடுவார். பாடல் முடிந்தவுடன் தலைவர் அந்த நபரின் கண்களைத் திறந்து விடுவார். ஒளிந்திருக்கும் குழந்தைகளை அந்த நபர் தேடிக்கொண்டு போகும் போது அவரிடம் சிக்கியவர் அவுட்டாகிறார். இதன் பின்னர் அவுட்டான நபரின் கண்கள் மூடப்படும். மீண்டும் விளையாட்டு தொடரும். தேடும் நபரிடம் அகப்படாமல் குழந்தைகள் அனைவரும் தலைவரை தொட்டுவிட்டால் அவர்கள் பழமாவார்கள். இதுபோன்ற சுவாரஸ்யமான விளையாட்டுகளை எல்லாம் கிராமங்களில் காண முடிவதில்லை என்பதுதான் வேதனை. சிறுவர்களின் உலகத்தை இப்பொழுது கார்டூன் சேனல்களும், வீடியோ விளையாட்டுக்களும் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதால் நாட்டுப்புறவிளையாட்டுக்களை இனி கதைகளில் மட்டுமே படிக்கவேண்டியிருக்கும்.