ஐந்தே ஆண்டுகளில் 340 பேரை தூக்கில் போட்ட கிம் ஜோங்!

வாஷிங்டன், டிசம்.30- வட கொரியாவின் சர்வாதிகாரத் தலைவரான கிம் ஜோங் யுன் கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 340 பேரைத் தூக்கிலிட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு தூக்கிலிடப்பட்டவர்களில் சிலர் நாட்டின்ன் முக்கிய தலைவர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஐந்து ஆண்டுகாலமாக ஆட்சி அதிகாரத்தில் இருந்துவரும் கிம் ஜோங் யுன், தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே இத்தனை பேரை தூக்கிலிட்டுள்ளார் என்று தென் கொரியாவில் இருந்து செயல்படும் ஆய்வு அமைப்பு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தூக்கிலிடப்பட்ட 340 பேரில் 140 பேர் வடகொரிய அரசாங்கத்திலும் இராணுவத்திலும் ஆளும் தொழிலாளர் கட்சியிலும் மூத்த அதிகாரிகளாக இருந்தவர்கள் என்று தேசிய பாதுகாப்பு மீதான வியூக கழகத்தின் இயக்குனரான புரூஷ் பென்னெட் தெரிவித்தார்.

ஐந்து ஆண்டுகால கிம் ஜோங் யுன்னின் ஆட்சி மிகக் கொடூரமானது. இந்தக் காலக் கட்டத்திற்குள் ஐந்து முறை அவர் தற்காப்பு அமைச்சர்களை நீக்கியுள்ளார். இப்போது அவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை என்று புரூஷ் தெரிவித்தார்.