உள்ளாட்சிகளில் அதிகாரிகள் ஆட்சி கூடாது மக்களாட்சியே உடனடி தேவை! - மருத்துவர் ராமதாஸ்

TN Images: 

உள்ளாட்சிகளில் அதிகாரிகள் ஆட்சி கூடாது மக்களாட்சியே உடனடி தேவை! என்றும் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் பணிகள் பாதிப்பு அடைந்துள்ளது  மார்ச் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்  டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படாத நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து அரசு ஆணையிட்டிருக்கிறது. இன்றைய நிலையில் இது தவிர்க்க முடியாதது என்றாலும், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணையின்படி திசம்பர் மாத இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படாதது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த அக்டோபர் மாதம் 24-ஆம் தேதிக்குள் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு, புதிய மக்கள் பிரதிநிதிகள் பதவியேற்றிருக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிக்கையை கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட நிலையில், அதில் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படாததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிக்கையில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதைக் காரணம் காட்டி அதை இரத்து செய்தார். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தொகுதிகளை மறுவரையரை செய்து திசம்பர் 31-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும், மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கும் ஆணையிட்டார். கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், அதன்பின் 3 மாதங்கள் அவகாசம் இருந்ததால் நீதிபதியின் வழிகாட்டுதல்படி திசம்பருக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடித்திருக்கலாம். ஆனால், செயல்படாத அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டித்திருக்கிறது.

பொதுவாக உள்ளாட்சித் தேர்தல்களை அண்மைக்கால மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, தொகுதி மறுவரையரை செய்து நடத்துவது தான் வழக்கம். அதன்படி தான் தேர்தலை நடத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், அதை ஏற்று தொகுதி மறுவரையரை செய்து தேர்தலை நடத்தியிருந்தால் எந்த சிக்கலும் ஏற்பட்டிருக்காது. உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்த உயர்நீதிமன்றம், புதிதாக தொகுதி மறுவரையரை செய்து தேர்தல் நடத்த எந்த தடையும் விதிக்கவில்லை. ஆனால், அந்த தீர்ப்பை ஏற்க மறுத்த தமிழக அரசு அதை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று அக்டோபர் 18&ஆம் தேதியும், நவம்பர் 15&ஆம் தேதியும் கூறிவிட்ட நிலையில், அதன்பிறகாவது மாநில தேர்தல் ஆணையம் விழித்துக் கொண்டு புதிதாக தொகுதி மறுவரையரை செய்து உள்ளாட்சித் தேர்தலை நடத்த முயற்சி செய்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய அரசும், தேர்தல் ஆணையமும் தவறி விட்டன.

உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் ஜூன் மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குள்ளாவது உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படுமா அல்லது உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவின் மீதான தீர்ப்புக்காக காத்திருக்குமா? என்பது தெரியவில்லை. இவற்றில் இரண்டாவது வழியை அரசு தேர்வு செய்தால் அது தொடர்கதையாக நீளும் என்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் கூட உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட வாய்ப்பில்லை.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் மக்கள் நலப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு தனி அதிகாரி பல உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க வேண்டியிருப்பதால் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது குறித்து அவர்களால் உடனடியாக முடிவெடுக்க முடியவில்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தால் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் வர்தா புயல் பாதிப்புகளை இன்னும் விரைவாக சரி செய்திருக்க முடியும். தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சி வாட்டத் தொடங்கியுள்ள நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இருந்தால் குடிநீர் பஞ்சம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு விரைவாகத் தீர்வு காண முடியும். இப்போது ஒவ்வொரு பணிக்கும் அதிகாரிகள் மேலிடத்தின் ஒப்புதலை வாங்க வேண்டியிருப்பதால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டால் மட்டும் தான் உள்ளாட்சித் தேர்தல்களை ஒத்திவைக்க வேண்டும்; எந்திரத்தனமாக ஒத்திவைக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றமும், பல உயர்நீதிமன்றங்களும் தீர்ப்பு அளித்துள்ளன. ஆனால், அத்தீர்ப்புகள் தமிழகத்தில் மதிக்கப்படவில்லை. மேலும் பஞ்சாயத்து ராஜ் சட்டம் தமிழகத்தில் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. 73-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி மாநில தேர்தல் ஆணையங்கள் இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யப்பட்டிருந்தால் ஆளுங்கட்சி தலையீடு இல்லாமல் மாநிலத் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட முடியும். அத்தகைய சூழலில் 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையரை செய்யப்பட்டிருக்கும் என்பதால் இத்தகைய குழப்பங்கள் ஏற்பட்டிருக்காது.

உள்ளாட்சி அமைப்புகள் பொதுமக்களின் தேவைகளை அவர்களே நிறைவேற்றிக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டனவே தவிர, அதிகாரிகள் ஆட்சி செய்ய ஏற்படுத்தப்படவில்லை. இதை உணர்ந்து மார்ச் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, மாநிலத் தேர்தல் ஆணையம் ஆட்சியாளர்களின் தலையீடின்றி செயல்பட வசதியாக அவற்றை இந்திய தேர்தல் ஆணையத்துடன் தமிழக அரசு இணைக்க வேண்டும்.

என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.