உங்கள் குழந்தை அடிகடி உடல்நிலைக் கோளறு சொல்கிறார்களா?.

சில குழந்தைகள் அடிகடி ஏதாவது சுகவீனம் என்று கூறுவார்கள் இதற்கு காரணம் கொடுமைப்படுத்தல், அச்சுறுத்துதல், வெருட்டுதல் போன்றவை அந்தப் பிஞ்சு உள்ளங்களை எவ்வாறு பாதிக்கும். பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு அதைப்பற்றி முறையிடத் தெரியாது. யாரிடம் முறையிடுவது எவ்வாறு முறையிடுவது போன்றவை அவர்களுக்கு சிக்கலாக இருக்கும். அதிலும்  தங்களுக்கு நெருக்கமான தாய் தகப்பன், சகோதரங்கள், சகமாணவர்கள், ஆசிரியர் போன்றோர்களிலிருந்து வரும் அச்சுறுத்தலை எங்கு முறையிடுவது என்பது புரியாது திகைப்பார்கள். இதனால் அவை உடல் நோயாக வெளிப்படலாம்.

பொதுவாக இத்தகைய குழந்தைகள் கீழ்கண்ட பாதிப்புகள் தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறுவார்.

 • தலைவலி,
 • வயிற்றுவலி,
 • முதுகுவலி,
 • கழுத்து வலி,
 • தோள் மூட்டு உளைவு,
 • சுவாசிப்பதில் சிரமம்,
 • தசைப்பிடிப்புகள்,
 • இருமல்,
 • வாந்தி,
 • பேதி

தலைவலி என்றால் என்றதும் ஏதாவது ஆபத்தான நோயாக இருக்குமா எனப் பயந்தடித்து பிள்ளைகளை இழுத்துக் கொண்டு மருத்துவரை தேடி ஓடுகிறோம்.

எப்பொழுதாவது ஒரு தடவை அத்தகைய அறிகுறிகள் வந்தால் அது உண்மையான நோயாக இருக்கலாம். ஆனால் அடிக்கடியும், காரணம் புலப்படாதபோது வந்தால் அது பிள்ளையின் மனதில் மறைந்துள்ள ஏதாவது ஒரு அச்சம் காரணமாக இருக்கலாம் என்பதை பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.

பிள்ளைகள் விளையாடும்போது சகோதரங்களாலோ நண்பர்களாலோ கிண்டல் பண்ணப்படுவது சகசமானது. விளையாட்டுதனமாகவும் நட்புறவுடனும் ஒருவருக்கொருவர் கிண்டல் அடிப்பதை பிள்ளைகள் வேடிக்கையாகவே எடுப்பார்கள். ஆனால் அது கேலி என்ற அளவைத் தாண்டி மனதைப் புண்படுத்துவதாக, இரக்கமற்றதாக கொடுமையானதாக மாறும்போது அது அச்சுறுத்தலாக மாறுகிறது.

கொடுமைப்படுத்தல் என்பது உடல் ரீதியானதாக மட்டும் இருக்கும் என்றில்லை.

 • அது கடும் வார்த்தைகளாகவோ உளரீதியாகவும் இருக்கலாம்.
 • அடித்தல்,
 • இழுத்தல்,
 • பட்டப் பெயர் வைத்து இழித்தல,
 • அச்சுறுதல்,
 • வெருட்டிப் பணம் கறத்தல்
 • அல்லது பொருட்களைப் பறித்தல் போன்ற பலவாகலாம்.
 • குறிப்பிட்ட பிள்ளையைப் புறக்கணிப்பதும், தவறான வதந்திகளைப் பரப்புவதும் ஆகலாம்.
 • இன்றைய காலத்தில்  குறும் தகவல்களாலும், பேஸ்புக் போன்ற சமூகதளங்கள் ஊடாகவும் மன உளைவையும் அச்சுறுத்தலையும் கொடுக்கலாம்.

இவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனெனில் அது பிள்ளையின் சுயமதிப்பைப் பாதிப்பதுடன், அதனது பாதுகாப்பு உணர்வையும் பலவீனப்படுதும் அளவு தீவிரமானதாகும். சற்று வளர்ந்த பிள்ளைகளில் இது தற்கொலைக்கு கூட இட்டுச் செல்லலாம் என்பதை மனதில் இருத்தி எதிர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெற்றோரின் கடமை

குழந்தை தானாகச் சொல்லுமளவு காத்திருக்கக் கூடாது. பிள்ளைகளின் நடவடிக்கைகளில் ஏற்படும் சின்னச் சின்ன மாற்றங்களைகண்காணிக்க வேண்டும், பிள்ளை பதற்றமாக இருக்கலாம், வழக்கம்போல உணவு உண்ணாமளிருக்கலாம், எரிச்சல்படலாம், எளிதில் கோபமுறலாம் தூக்கக் குழப்பம் ஏற்படலாம். இவற்றை எல்லாம் கவனிக்க வேண்டும்.

வெட்கம் காரணமாகவோ, பிரச்சனை வெளிப்படுவதால் தான் மேலும் கொடுமைப்படுத்தப்படலாம் என்பதாலும் தனது பிரச்சனையை வெளிப்படுத்த பிள்ளை தயங்கக் கூடும். பெற்றோர்களில் தன்னில் குற்றம் கண்டு தன்னையே திட்டவோ அடிக்கவோ கூடும் எனவும் தயங்கலாம்.

எனவே ஆதரவோடும் அனுதாபத்துடனும் பெற்றோர்கள் அதை அணுக வேண்டும். தாங்கள் இவ்விடயத்தில் உறுதுணையாக இருப்போம். உதவுவோம் என்பதை தங்கள் பிள்ளைக்கு உணர்த்த வேண்டும்.

‘பலர் இவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள். நீ தனியாக இல்லை. அச்சுறுத்தியவனே இழி செயலைச் செய்கிறான். நீ அல்ல’ என தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்விஷயத்தில் ‘கவனம் எடுத்து சிக்கலைத் தீர்க்க வேண்டிய நடவடிக்கை எடுப்பேன்’ என நம்பிக்கை அளியுங்கள். பள்ளியில் ஆசிரியர், அதிபர் அல்லது பொறுப்பானவருக்கு இவ்விடயத்தை தெரியப்படுத்தி மேலும் அவ்வாறு  நிகழாதிருப்பற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுங்கள்.

சில தருணங்களில் அச்சுறுத்துபவனின் பெற்றோரை அணுகுவதும் உதவலாம். ஆயினும் நீங்கள் தனியாகச் செய்வதை விட பள்ளி சார்ந்தவர்களின் உதவியோடு அணுகுவது நல்ல பலன் தரலாம்.

இவை எல்லாவற்றிகும் மேலாக தங்கள் பிரச்சனையை உங்களிடம் சொன்னால் நீங்கள் கோபிக்க மாட்டீர்கள். தட்டிக் கழிக்கமாட்டீர்கள். அனுதாபத்துடன் அணுகுவீர்கள். ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையை உங்கள் பிள்ளையிடம் ஏற்படுத்துங்கள்.

இவ்வாறு செய்து குழந்தையிடமிருந்த அச்சத்தை விரட்டினால் அடிக்கடி தலையிடியும் வயிற்று வலியும் அணுகாது உங்கள் குழந்தைக்கு.

பள்ளிக்கு கட் அடித்தல் இனி அதற்கு இல்லை. இல்லவே இல்லை.