இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப தயாராகிறது இஸ்ரோ..

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ செவ்வாய் கிரகத்துக்கு ‘மங்கள்யான்’ விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பி சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில் அடுத்த சாதனையாக விண்வெளிக்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ தீவிரமாக உள்ளது. அதற்காக நவீன ‘கேப்சூல்’ தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

விண்வெளியில் இந்தியர்களை ஆய்வுக்கு அனுப்புவது இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான, 'இஸ்ரோ'வின் லட்சியம். தற்போது அதற்கு வேண்டிய தொழில்நுட்பங்களை இஸ்ரோவே உருவாக்கியுள்ளது.  'விண்வெளியில் இந்திய வீரர்கள் வாரக் கணக்கில் தங்கி ஆய்வு செய்வதற்கு விண்கலனில் ஆக்சிஜன் மற்றும் கார்பன் - டை - ஆக்சைடு அளவுகள் தோதாக இருக்க வேண்டும். விண்கலனில் இதற்கு வசதியான அறைகளை உருவாக்கும் தொழில்நுட்பங்களை தற்போது சோதித்து வருகிறோம்' என்று சமீபத்தில் அகமதாபாத்தில் நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் தெரிவித்தார், இஸ்ரோவின் தலைவர் ஏ.எஸ்.கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.

விண்கலன் பூமிக்கு திரும்பும்போது, காற்று மண்டலத்திற்குள் நுழைந்ததும், கலனின் வெளிப்பகுதி மிதமிஞ்சிய வெப்பத்திற்கு உள்ளாகும். 'இதற்கு வெப்பத்தை தணிக்கும் வண்ணப் பூச்சுக்களையும், கலனுக்குள் தீப்பிடித்தால் அதை அணைக்கத் தேவையான தீயணைப்பு வேதிப் பொருட்களையும் தற்போது பரிசோதித்து வருகிறோம்' என்று கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே இதுவரை மனிதர்களை விண்வெளி ஆய்வுக்கு அனுப்பி உள்ளன. நான்காவது நாடாக இடம்பிடிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

அதற்காக பரீட்சார்த்தமாக மிக குறைந்த செலவில் விண்கலம்  ஒன்றை தயாரித்துள்ளது. அதற்கு ‘க்ரோ மாடல்’ என பெயரிட்டுள்ளனர். இதை தயாரிக்கவும், விண்வெளி வீரர்கள் உடை மற்றும் தொழில்நுட்ப தேவைகளுக்காக ரூ. 145 கோடி மட்டும் செலவிடப்பட்டது.

கடந்த 1½ ஆண்டுகளாக ‘இஸ்ரோ’ என்ஜினீயர்களால் இந்த விண்கலம்  வடிவமைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் பரிசோதனையை நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்த பரிசோதனை இன்னும் 2 வாரங்களில் நடைபெற உள்ளது. தொடக்கத்தில் 3.7 டன் எடையுள்ள விண்கலம்  3.5 கி.மீட்டர் உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் மிக மெதுவாக தரை இறக்கப்படும்.

இந்த முயற்சி வெற்றி பெற்றால் 120 கி.மீட்டர் உயரத்தில் இருந்து ராக்கெட்டில் இருந்து விண்கலத்தை வெளியேற்றி மெதுவாக கடலில் தரை இறக்கப்படும். 

இந்த பரிசோதனைகள் வெற்றி பெறும் நிலையில் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் விண்கலம் தயாரிக்கப்படும்.