அழகான கழுத்தைப் பெறுவது எப்படி?

நம் இலக்கியங்களில் பெண்களின் கழுத்தை பலவாறு வர்ணித்து எழுதப்பட்டுள்ளது. பார்த்தவுடன் பெண்களின் முக அழகிற்கு மேலும் அழகூட்டுவது கழுத்து என்றால் மிகையாகாது. ஒவ்வொரு பெண்ணும் தங்களின் முக அழகைச் சிரத்தையோடு பராமரிக்கும் அளவிற்கு கழுத்தினைப் பராமரிக்கக் காட்டுவதில்லை. இதனால் பல பெண்களுக்கு அழகான பளபளப்பான முகம் இருக்கும். ஆனால் கழுத்து மட்டும் கருத்தும் சுருக்கங்களோடு சொரசொரப்பானதாக இருக்கும். முகத்தை அழகாகப் பொலிவுடன் பராமரிக்க முடியும்போது கழுத்தைப் பராமரிக்க என் முடியாது.

மென்மையான கழுத்துப் பகுதியை நீங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டால் வேர்க்குரு, எண்ணெய் பிசுக்கு போன்றவைகளினால் தோலின் தன்மை மிருதுவான தன்மையை இழக்கும். சுருக்கங்களோடு முரட்டுத்தனமான தோற்றத்தைக் கொடுக்கும்.

இதற்கு வீட்டில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தியே கருமையை போக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

எப்பொழுதெல்லாம் முகத்தைக் கழுவுகிறீர்களோ அப்பொழுது கழுத்தையும் சுத்தப்படுத்துங்கள்.

பேஷியலோடு மசாஜ் செய்யும்போது கழுத்துப் பகுதியிலுள்ள தோலை மென்மையாக்குவதோடு இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. இயற்கை மூலிகைகளைக் கொண்டு செய்யும் ப்ளீசிங் மற்றும் பேஷியலுமே சிறந்தவை. அதுதான் முகத்தையும் தோலின் தன்மையும் நல்ல முறையில் பாதுகாக்கும்.

பச்சரிசி விழுதாக அரைத்துக் கழுத்தில் மருக்கள் உள்ள இடங்களில் போட்டு வந்தால், அவை குறையும்.

கழுத்தில் அணியும் அணிகலன்களை சோப்பும், எலுமிச்சம் பழச்சாறும் கலந்த தண்ணீரில் போட்டு வாரத்திற்கொரு முறை சுத்தப்படுத்த வேண்டும். ரக்த சந்தனம், முல்தானி மிட்டி, பண்ணீர், கிளிசரின் ஆகிய அனைத்தையும் கலந்து கழுத்தின் பின் பக்கத்தில் தடவி அரை மணி நேரம் ஊறவும். பிறகு கழுவி விடவும். பின்னங்கழுத்து கருமையைப் போக்க இது உதவும்.

பாலாடையுடன் சிறிதளவு குங்குமப் பூ கலந்து கழுத்தின் முன் பகுதி மற்றும் தொண்டை ஆகிய இடங்களில் தடவவும். பதினைந்திலிருந்து முப்பது நிமிடங்கள் வரை காத்திருந்து கழுவிடவும். இது கழுத்தை நிறமாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவும்.

ஒரு டீஸ்பூன் வெங்காயச் சாறு, சிறிது ரோஸ் வாட்டர், இரண்டு சொட்டு ஆலிவ் எண்ணெய், ஒரு ஸ்பூன் பாசிப்பயறுமாவு ஆகிய நான்கையும் கலந்து கழுத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவிவரலாம். வாரம் மூன்று முறை இந்த நடைமுறையை பின்பற்றினால் கழுத்தின் கறுப்பு நீங்கிவிடும்.

கோதுமை, பாசிப்பயறு, ஓட்ஸ் ஆகிய மூன்றின் மாவையும் பாலுடன் கலந்து கொள்ளுங்கள். இதை கழுத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் கழுத்தின் கறுப்பு நிறம் மறையும்

ஒரு முட்டையின் வெள்ளைக் கருவுடன், ஒரு டீஸ்பூன் தேன் கலந்து கழுத்தில் தடவி, முப்பது நிமிடங்கள் கழித்துக் கழுவினால் கழுத்து சுருக்கங்களின்றியும், அழகாகவும் இருக்கும்.

தர்பூசணிப் பழச்சாறுடன் பாசிப்பயறு மாவு கலந்து அதனை ஃப்ரிட்ஜில் வைக்கவும் அரை மணி நேரம் கழித்து, அந்த விழுதை எடுத்து கழுத்தில் தடவி வர, வெயிலில் கறுத்துப்போய் வறண்ட சருமம் புதுப்பொழிவு பெறும்.

கோதுமை மாவில் வெண்ணையை கலந்து கழுத்தைச் சுற்றிப் பூசி வர வேண்டும்.
பின் இருபது நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும். இப்படி தொடர்ந்து தினமும்  செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருவளையம் படிப்படியாக மறைந்து விடும்.

சிறிது சூடாக்கப்பட்ட நல்லெண்ணெ கொண்டு கழுத்துப் பகுதியில் மசாஜ் செய்தால் கழுத்து பகுதியில் உள்ள சுருக்கம், கறுப்பு வளையம் படிப்படியாக நீங்கி விடும்.

மருத்துவ ரீதியான பிரச்சினைகளும் கழுத்து கருப்பாக இருப்பதற்குக் காரணமாக இருக்கலாம். வழக்கமான இந்தப் பராமரிப்பு முறைகள் எதுவும் இதற்கு உதவாது. எனவே தோல் சிகிச்சை நிபுணரைப் பார்க்கலாம். கழுத்தின் பின் பகுதிக்கும் இந்தப் பராமரிப்பு முறைகள் மிக அவசியம்.

தினசரி கழுத்துப் பயிற்சி

  • தலையை பின்புறம் 10 முறையும் முன்புறம் 10 முறையும் சாய்க்கவும்.
  • தலையை நன்றாக பின்நோக்கி வைத்துக் கொண்டு, வாயை நன்றாகத் திறந்து அசைத்து மூடவும்.
  • தலையை ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு திருப்பவும். பிறகு தலையை வலது தோள்பட்டை வரை கொண்டு சென்று மறுபடி இடது தோள்பட்டைக்கு கொண்டு செல்லவும். இது போல் 10 முதல் 20 தடவை செய்யவும்.